தங்கர்பச்சானும் உள்குத்து அரசியலும்

முன்குறிப்பு
இங்கே தங்கர்பச்சான் பேசியது சரியா? தவறா? என்ற கோணத்தில் இந்த பதிவு எழுதப்படவில்லை, ஆனால் தங்கர் பச்சானின் பேச்சுக்கு புரியப்பட்ட அதிக பட்ச எதிர்வினையில் உள்ள உள்குத்து அரசியல் தொடர்பானது

தங்கர்பச்சானின் பேச்சிற்கு அளவுக்கு மீறிய எதிர்ப்பு நடிகர்களாலும் நடிகைகளாலும் காட்டப்படதற்கு உள்ளே சில அரசியல் காரணங்கள்.

1. தங்கர் பச்சான் திருமாவின் மேடைகளில் அடிக்கடி தோன்றுபவர், திருமாவின், இராமதாசுவின் நடிகர்களின் மீதான விமர்சனங்களை தாங்கமுடியாமல் இந்த அரசியல் பாறைகளின் மீது மோதி ரஜினி போன்ற தலைகளுக்கே மண்டை உடைந்தது தான் மிச்சமானது , நடிகர்கள் அங்கே பட்ட காயம், ஈகோவிற்கு வசமாக மாட்டினார் தங்கர், யாரிடமோ பட்ட காயத்திற்கான ஈகோவை இவரை போட்டு தாக்குவதினால் தீர்த்துக்கொள்கின்றனர்.

2.இயக்குனர் சீமானும் கவிஞர் அறிவுமதியும், இயக்குனர் சேரனும் திருமாவின் மேடைகளில் அடிக்கடி தோன்றுபவர்கள், இவர்கள் அத்தனை பேருமே நடிகர்களுக்கு முதுகு சொறிந்து விட்டுக்கொண்டு திரையுலகில் பிழைப்பை ஓட்டுபவர்கள் அல்ல, திறமைசாலிகள் அதே சமயம் முதுகெலும்பு உள்ளவர்கள் எந்த நடிகனுக்கும் முதுகு சொறிந்து கொண்டும் கூஜா தூக்கியும் கலைவாழ்க்கையை நடத்துபவர்கள் அதே சமயம் அதிரடியாக பேசுபவர்கள், அடிக்கடி நடிகர்களின் உண்மையான முகத்தை கிழித்து காட்டியவர்கள், எனவே தங்கரை தட்டுவதன் மூலம் இவர்களுக்கும் எச்சரிக்கை கொடுக்கப்பட்டுள்ளது.

3. சமீபத்தில் தயாரிப்பாளர் காஜா மொய்தீன் மாத்திரை தின்றதற்கு கமல்,விஜயகாந்த் மேலெல்லாம் கைகாட்டப்பட்டு பின் உடல் நலம் தேறி வந்தவுடன் என்ன நடந்தது என சொல்கிறேன் என புறப்பட்ட காஜா மொய்தீன் மடக்கப்பட்டு சில ஆண்டுகளுக்கு முன் வைத்து படம் எடுத்த அஜீத்தை பலிகடாவாக்கினார், ஆனாலும் இதில் பெருந்தலைகள் கெட்ட பெயர் சம்பாதித்துக்கொண்டனர், அதிலும் கட்சி ஆரம்பித்து தமிழர்களை காப்பாற்றப்போகும் கேப்டன் நிறையவே கெட்ட பெயர் சம்பாதித்துக்கொண்டார்

4.திரைத்துறை என்றாலே நடிகர்கள் என்றிருந்த நடிகர்களின் ஆதிக்கத்தை உடைத்தெரிந்து தயாரிப்பாளர்களின் கை ஓங்க ஆரம்பித்தது சமீப காலங்களில், தாணு விடயத்தில் சிம்பு மன்னிப்பு கேட்டதும், மாதவன் மன்னிப்பு கேட்டதும், ஜோதிகாவிலிருந்து பலருக்கும் ரெட் கார்டு போடப்பட்டதுமென தயாரிப்பாளர்களின் கை ஓங்கியது, அதிலும் கடைசியாக விஜயகாந்த்திற்கு தயாரிப்பாளர்கள் சங்கத்திலிருந்து நோட்டீஸ் அனுப்பப்பட்டு 3 நாள் கெடுவும் வைக்கப்பட்டது, தயாரிப்பாளர்கள் விஜயகாந்த்தை எதிர்த்து பத்திரிக்கையில் பேச இருப்பதாக தயாரிப்பாளர்கள் தரப்பிலிருந்து பேட்டி கொடுக்கப்பட்ட நேரத்தில் ஒரு தயாரிப்பாளர் என்ற முறையிலும் தங்கர் மாட்டினார், தயாரிப்பாளர்களுக்கு திரைத்துறை என்றாலே நடிகர்களின் ஆதிக்கம் மட்டுமே என்று காண்பிக்கவும் நடிகர்களின் வண்டவாளங்களை வெளியில் சொன்னால் என்ன ஆகும் என தயாரிப்பாளர்களை மிரட்டவும் தங்கர் பயன்பட்டார்.

5.திறமை இருக்கும் அதே சமயத்தில் வாயும் இருக்கும் மனிதர்கள் யாருக்கும் பயப்படாமல் முதுகு சொறிந்துவிடாமல் வெற்றிகளை கண்டிருக்கும் மனிதர்களின் மீது பொறாமை ஏற்படுவது இயல்பு, அதுவும் திரைத்துறையில் நடிகர்களுக்கு முதுகு சொறியாமல் எந்த பின்புலங்களும் இல்லாமல் ஒரு திறமைசாலி வெற்றி பெற்றால் அது கடும் பொறாமை தீயை ஏற்றிவிடும், அப்படி பட்ட இயக்குனர் தான் தங்கர், அவர் வாய்கொழுப்பு அவர் மீதிருந்த வன்மத்தை காட்ட சரியான தருணமாக அமைந்துவிட்டது.

6."நடிகர்-நடிகைகளைப் பற்றி இனிமேல் அவதூறாக பேசி னால், ஸ்டிரைக்தான். ஸ்டிரைக்கைத் தவிர வேறு எதுவும் கிடையாது'' என்று விஜயகாந்த், கூட்ட முடிவில் அறிவித்தார்"

இது தங்கருக்கு மட்டுமல்ல, தயாரிப்பாளர்கள், அரசியல்வாதிகள் என அனைவருக்கும் விடப்பட்ட எச்சரிக்கை, படத்திற்கு படம் மேடைக்கும் மேடை அரசியல்வாதிகளையும், காவல்துறையினரையும் இன்ன பிறரையும் கேவலமாக காண்பித்து விமர்சிக்கும் நடிகர்கள் அவர்களை யாரும் விமர்சித்தால் வேலை நிறுத்தம் தானாம்! நடிகர்/நடிகைகளுக்கு வேலை நிறுத்தத்தால் ஒரு பிரச்சினையும் இல்லை, ஆனால் திரைத்துறையை நம்பியிருக்கும் குடும்பங்கள்?!

7.தயாரிப்பாளர்களின் பிரச்சினகளைப் பற்றி மேலும் பேச தயாராக உள்ளேன் என்று அதே பேட்டியில் கூறியுள்ளார், ஒரு வேளை தங்கர் பேச ஆரம்பித்தால் பலரின் வண்டவாளம் தண்டவாளம் ஏறும் என்பதால் தங்கரின் வாயை மூட கிளம்பிவிட்டனர்.
ஆக மொத்தத்தில் ஒரே கல்லில் ஏழு மாங்காய்கள் அடிக்கப்பட்டுள்ளது, இன்னும் எத்தனை மாங்காய்கள் என்பது போகப்போகத் தெரியும்

எச்சரிக்கை அல்லது வேண்டுகோள்

இங்கே பதிவில் வந்து எவனாவது தரக்குறைவான வார்த்தைகளை பயன்படுத்தினால் நானும் தமிழன் தான் எனக்கும் தமிழில் உள்ள அத்தனை தரக்குறைவான வார்த்தைகளும் தெரியும் நாய் மனிதனை கடிப்பது அதன் இயல்பு என்று சொல்லி அந்த தரக்குறைவு பேர்வழிகளை நாய்களோடு ஒப்பிட்டு நாயை கேவலப்படுத்த விரும்பவில்லை, தரக்குறைவு பின்னூட்டங்கள் அழிக்கப்படும், அதுவும் ஒரு அளவு வரை தான்.

தங்கர் செய்த தவறுதான் என்ன?

சொல்ல வரும் கருத்தில் கடுமையான வார்த்தைகள் இருந்தால் கருத்தைவிட்டு வார்த்தையை பிடித்து தொங்கும் விபரீதம் நடைபெறும், அதற்கு இதோ மற்றுமோற் உதாரணம் தங்கர்பச்சான்.

நடிகர் நடிகைகள் தயாரிப்பாளர்களுக்கும் இயக்குநர்களுக்கும் தரும் இன்னல்களை எடுத்து கூற வந்து "பணத்துக்காக நடிக்கும் நடிகைகள் விபச்சாரிகளுக்கு ஒப்பானவர்கள்" என புயலை கிளப்பிவிட்டார்.

தாணு கமலிடமும் நேற்று முளைத்த காளான் சிம்புவிடமும் பட்ட அவதியெல்லாம் தெரிந்த விடயம் தான்.

தயாரிப்பாளர் G.V. தூக்கு கயிற்றை முத்தமிட்டதற்கும் காஜாமொய்தீன் மாத்திரை தின்றதற்கும், பழவண்டி வைத்து வியாபரம் செய்து கொண்டிருக்கும் தயாரிப்பாளர்களும் இந்த நிலைக்கு ஆனதற்கு வெறும் கந்துவட்டிகாரர்கள் மட்டுமா காரணம் இந்த பஞ்சாயத்து பேசும் நடிகர்களும் தானே காரணம்.

பணத்திற்காக வேலை செய்யாதவர்கள் யார்தான் உள்ளனர்? தங்கர்பச்சான் பணம் வாங்கமல் ஒளிஓவியர் வேலையையோ அல்லது இயக்குனர் வேலையையோ செய்வாரா? திரைப்படத்துறையைவிடுங்கள் யார்தான் பணம் வாங்காமல் எந்த வேலையைத்தான் செய்வர், ஆனால் work ethics என்பதே இல்லையா?? இந்த நடிக,நடிகைகள் படப்பிடிப்பின் இறுதி கட்டத்திலும் டப்பிங் போதும்தான் இந்த டகால்டி வித்தையெல்லாம் காண்பிப்பர், படத்தின் தொடக்கத்தில் பொத்திக்கொண்டு இருப்பார்கள்.

நடிகர்,நடிகைகளுக்கும் கோடிக்கணக்கில் கொட்டி அழுதுவிட்டு பின் மாத்திரை தின்னும் தயாரிப்பாளர்கள் துணை நடிக/நடிகைகளுக்கும் தொழில்நுட்பர்களுக்கும் இன்ன பிற வேலை செய்பவர்களுக்கும் சரியான கூலி கொடுக்காமல் வயிற்றில் அடிப்பார்கள்.


தங்கர் விபச்சாரி என்ற வார்த்தையை பயன்படுத்தியதுதான் இங்கே பிரச்சினை. "பணத்துக்காக மட்டும் நடிக்கும் " என்றாவது சொல்லியிருக்கலாம் ஆனால் இதற்காக செய்யப்படும் அளவுக்கு மீறிய எதிர்வினைகள் எங்கே இந்த நடிகர்களும்/நடிகைகளும் பணத்திற்காக செய்யும் அட்டகாசங்கள் வெளியாகிவிடுமோ என்ற பயத்தினால் செய்யப்படும் காட்டு கூச்சல் தான் என்பதில் சந்தேகமில்லை.

கேரவன் வேன் வேண்டும், அரசப்பரிலிருந்து நண்டு வறுவல், தாஜ் லிருந்து தோ-மியான், என்று பதார்த்ததிற்கு ஒரு உணவகத்திலிருந்து உணவு கேட்டு தயாரிப்பாளர்களை வறுத்தெடுக்கும் நடிகர்/நடிகைகளின் முகத்திரை கிழியும் போது கூச்சல்கள் எழத்தான் செய்யும்.

தயாரிப்பாளர்களின் பிரச்சினகளைப் பற்றி மேலும் பேச தயாராக உள்ளேன் என்று அதே பேட்டியில் கூறியுள்ளார், ஒரு வேளை தங்கர் பேச ஆரம்பித்தால் பலரின் வண்டவாளம் தண்டவாளம் ஏறும் என்பதால் தங்கரின் வாயை மூட கிளம்பிவிட்டனரோ?

இத்தனை நாளும் இதெல்லாம் வெளிவராமலில்லை, ஆனால் அந்த துறையில் உள்ள ஒருவர் சொல்லும் போது அதற்கு அழுத்தம் அதிகம் என்பதால் தான் இந்த குதி குதிக்கின்றனர்.

தங்கரின் வரிகளின் வார்த்தைகளுக்கிடையில் சில வாக்கியங்களை எடுத்துவிட்டு சிலம்பம் ஆடிக்கொண்டிருக்கும் பஞ்சாயத்து நடிகர்கள் "டிஸ்கஷன்"னுக்கு போகாதவர்களா? "டிஸ்கஷன்"னா என்னவென்று திரைப்படத்துறையில் இருப்பவர்களிடம் கேட்டுப்பாருங்கள்.

நடிகைகளுக்கு ஆதரவாக போராடும் நாயகர்களே நீங்கள் டிஸ்கஷன் நடத்தாமல் இருந்தாலே போதும், அதுவே அவர்களுக்கு நீங்கள் செய்யும் பெரிய உபகாரம்.

"தங்கர்பச்சான் படங்களில் இனிமேல் நடிப்பதா, வேண் டாமா?'' என்பது பற்றி முடிவு செய்ய, தனியாக ஒரு ஆலோ சனை கூட்டம் நடத்தி, அதில் முடிவு எடுப்போம்'' என்று விஜயகாந்த் கூறினார்."

தங்கரு உங்க அடுத்த படத்திற்கு 10கோடி சம்பளம் தருகிறேன் என பஞ்சாயத்து செய்தவரிடம் சொல்லிப்பாருங்க முதல் கால்ஷீட் உங்களுக்குத்தான்.

அடவிடுங்க தங்கர் காசு வாங்காமலே நான் உங்க படத்தில் நடித்து தருகின்றேன், எனக்கு கேரவன் வேன் வேண்டாம், அரசப்பர் நண்டு வறுவல் வேண்டாம்.

"நடிகர்-நடிகைகளைப் பற்றி இனிமேல் அவதூறாக பேசி னால், ஸ்டிரைக்தான். ஸ்டிரைக்கைத் தவிர வேறு எதுவும் கிடையாது'' என்று விஜயகாந்த், கூட்ட முடிவில் அறிவித்தார்."

படத்திற்கு படம் மேடைக்கும் மேடை அரசியல்வாதிகளையும், காவல்துறையினரையும் இன்ன பிறரையும் கேவலமாக காண்பித்து விமர்சிக்கும் நடிகரே வாழ்க உம் தலைமை.

தெக்கத்தி டெர்மினேட்டர் லிங்கம்

லிங்கம்,பிரபு,அயோத்திக்குப்பம் வீரமணி, எர்ணாவூர் நாராயணன், காட்டான் சுப்பிரமணி, கேட் சுப்பிரமணி, மிலிட்ரி குமார், வெல்டிங் குமார், சேரா, வெள்ளை ரவி, ஆத்தூர் கண்ணையா, வெடிகுண்டு பாஸ்கர், பாக்ஸர் வடிவேலு,கபிலன், ஆசைத்தம்பி மற்றும் பலர்.

தினம் செய்தித்தாள் படிப்பவரா நீங்கள்? அப்படியென்றால் இந்த பெயர்களையெல்லாம் நிச்சயம் கேள்விப்பட்டிருப்பீர், இந்த பட்டியலில் உள்ளவர்களில் சிலர் தற்போது உயிருடன் இல்லை, சிலர் திருந்தி வாழ்வதாக கூறியுள்ளனர்.

தற்போது சில வாரங்களாக தெக்கத்தி டெர்மினேட்டர் லிங்கம் என்றொரு தொடர் ஜீனியர் விகடனில் வந்து கொண்டுள்ளது, இந்த லிங்கம் என்பவர் சில ஆண்டுகளுக்கு முன் கன்யாகுமரி மாவட்டத்தை கலக்கியவர்,தமிழக அணியின் கபடி வீரராக இருந்தவர், அதன் பிறகு கொஞ்சம் கொஞ்சமாக மொத்த கன்னியாகுமரியையும் தன் பிடியில் கொண்டுவந்தவர், இவர் 90களின் முற்பகுதியில் ஆரம்பித்து 90களின் மத்திய பகுதிவரை கன்னியாகுமரியை கலக்கியவர், இவர் ஒரு கொலைவழக்கில் காவல்துறை தேடியபோது தலைமறைவாக இருந்த படியே நக்கீரன்(அல்லது ஜீனியர் விகடன்) பத்திரிக்கைக்கு பேட்டி தந்தார். அதை படித்த பிறகு அதனை தொடர்ந்து லிங்கம் தொடர்பான பத்திரிக்கக செய்திகளை சற்று ஆர்வத்துடன் தொடர்ந்து படிக்க ஆரம்பித்தேன், 1995ல் குமுதம்(அ)விகடன் ஏதோ ஒரு பத்திரிக்கையில் அட்டையில் (தகவல் பிழை இருக்கலாம்) இவரது படத்துடன் கூடிய இவரது பேட்டியை பதிப்பித்திருந்தனர், அந்த சமயத்தில் எப்போது வேண்டுமானாலும் கொல்லப்படலாம் என்றும் தெரிவித்தார், சரியாக ஒரு வருடத்திற்குள் கொடூரமாக தலை தனியாக துண்டிக்கப்பட்டு அவரின் எதிரிகளால் கொல்லப்பட்டார்.

இவரை போன்றவர்களின் பேட்டியும் அவர்களின் வாழ்க்கை வரலாற்றையும் அவர்களின் வீர பிரதாபங்களையும் நக்கீரன்,விகடன்,குமுதம் போன்றவை அவ்வப்போது பேட்டிகளாகவும் தொடர்களாகவும் வெளியிட்டு வருகின்றன. எந்த மனிதனும் முழுக்க கெட்டவனுமில்லை, முழுக்க நல்லவனுமில்லை, கெட்டவர்கள் என்று சமூகம் சொல்பவர்களிடம் சில நல்ல குணங்களும் உண்டு, நல்லதும் செய்திருப்பர், நல்லவர்கள் என்று சமூகம் சொல்பவர்களிடம் சில கெட்ட குணங்களும் உண்டு, கெட்டதும் செய்திருப்பர்.

இது மாதிரி சில நல்லதுகள் செய்திருந்தாலும் அவர்களின் பின்னணி இரத்தமயமானது, எனவே இதை படிக்கும் அத்தனை பேரும் ஒரு சம்பவமாகவோ அல்லது முதிர்ந்த மனத்துடனோ இருப்பார்கள் என்று சொல்லமுடியாது, அதிலும் முக்கியமாக இளம் வயதினர் (15-23 வயது) எந்த ஆபத்தையும் பற்றி எண்ணாமல் கால் தரையில் படாமல் திரியும் வயதினர், ஓடுற பாம்பை மிதிக்கிற வயதினருக்கும் ஒரு விதமான சாகச மனப்பான்மையிலிருப்பவர்களுக்கும் எது சரி எது தவறு என்று புரிவதில்லை, செயல்களின் விளைவுகள் சுத்தமாக புரிவதில்லை, இது மாதிரியான தொடர்களையும் நாயகன்,தளபதி,ரெட் இன்னபல இது மாதிரியான படங்களை பார்க்கும்போதும் 'நாலு பேருக்கு நல்லது செய்ய எது வேணா செய்யலாம்' என்ற வசனங்களை கேட்கும்போதும் அவர்களை அறியாமல் இதெல்லாம் தவறேயில்லை, சரி தான் என்கிற நினைப்பு வந்துவிடும் அவர்களுக்கு.

இந்த வயதிலுள்ள எல்லோருக்கும் அரவணைப்பான, நல்ல பெற்றோர்களும், நல்ல சகோதர சகோதரிகளும், நல்ல ஆசிரியர்களும், நல்ல நண்பர்களும் அமைந்தால் அவர்களை நல்வழிபடுத்துவர் எங்கேயானும் இதில் குறைபாடுகளிருந்து அதே சமயத்தில் இது மாதிரியான தொடர்களையும் படங்களையும் பார்த்துவிட்டு சாகச மனப்பாண்மையோடு ஏதேனும் முயற்சியில் இறங்கினால்?? இந்த வயதில் செய்யும் ஒரு சில செயல்கள் மொத்த வாழ்க்கையையும் மாற்றிவிடும், ஆனால் கொஞ்சம் கூட சமூக பொறுப்பின்றி நாயகன்,தளபதி,ரெட் மாதிரியான படங்களை எடுப்பதும் பத்திரிக்கைகள் தொடர்கள் வெளியிடுவதும் திரைப்படங்களும் பத்திரிக்கைகளும் அவர்களுடைய சமூக பொறுப்பற்று செயல்படுவதையே காண்பிக்கின்றது.
'இது யாரையும் நியாயப்படுத்தும் தொடர் அல்ல இதை படிப்பவர்கள் வன்முறையை நினைத்து பார்க்கக்கூட மாட்டார்கள்' என்று சப்பைகட்டு கட்டுவது வன்முறை வேண்டாமென படம் முழுக்க வன்முறையை காண்பித்து கடைசி காட்சியில் இரண்டு நிமிடம் போதனை வசனங்கள் பேசிய விருமாண்டி படத்தை போன்றது தான்.

நாம் அறிந்து கொள்ள எத்தனையோ சாதனையாளர்களின் வாழ்க்கை வரலாறு உண்டு, எத்தனையோ தியாகிகளின் வாழ்க்கை வரலாறு உண்டு.

குமுதம்,நக்கீரன்,விகடன், இன்ன பிற இதழ்களும் திரைப்படத்துறையினரும் தம் சமூக பொறுப்பை சிந்தித்து இம்மாதிரியான படங்களையும் தொடர்களையும் வெளியிடாமல் இந்த சமூக இளைஞர்களை வன்முறை வழியில் இறங்காமல் இருக்க உதவுங்கள்.

மரணத்தின் அருகில்

இருநூறு முன்னூறு பேர் கொண்ட கூட்டம் தனியாக இருக்கும் நான்கு பேருக்கு கொலை மிரட்டல் விடும்போது மனநிலை எப்படி இருக்கும்?

நான் கல்லூரியில் முதல் ஆண்டு படித்த போது முதலாண்டு செமஸ்டர் தேர்விற்காக விடப்பட்ட Study leaveல் ஊருக்கு சென்று அங்கு படிக்காமல் சாப்பிட்டு,தூங்கி எழுந்து கொண்டிருந்தேன், அந்த சமயத்தில் எங்கள் விடுதியில் உணவுக்கூடம்(மெஸ்) மூடப்பட்டுவிட்டது, ஆனால் ஒரு சில மாணவர்கள் மட்டும் விடுதியில் தங்கி தேர்விற்காக படித்தனர், சரி நாம்தான் வீட்டில் படிக்கவில்லையே, விடுதிக்கு சென்றாலாவது அங்கு இருக்கும் சில நண்பர்களோடு சேர்ந்து படிக்கலாம் என கிளம்பி விடுதிக்கு தேர்விற்கு ஒரு வாரத்திற்கு முன் அதிகாலை வந்து சேர்ந்தேன், நான் வந்த பொழுது விடுதி பரபரப்பாக இருந்தது.

விடுதியிலிருந்த சில நண்பர்கள் பரபரப்பாக இருந்தனர், என்ன என்று விசாரித்தபோது விடுதியிலிருந்த ஒரு மாணவர் விடம் குடித்த நிலையில் மருத்துவமனையிலிருக்கின்றார் என்று.

அதிகாலை 5.00மணிக்கு அந்த மாணவரின் அறைக்கு சென்று படிக்க எழுப்பியபோது வாயில் நுரை தள்ளிய நிலை, உடனடியாக நண்பர்கள் ஒரு ஆட்டோ வைத்து அருகிலிருந்த தனியார் மருத்துவமனைக்கு எடுத்து சென்றபோதும் ஏதோ விசப்பூச்சி கடித்துவிட்டது என்றே எண்ணியிருந்தனர்(பிறகு அவருடைய அறையின் மேசையிலிருந்து அவரின் கடிதம் கண்டெடுக்கப்பட்டது), தனியார் மருத்துவமனையில் பார்த்த உடனே விசம் குடித்துவிட்டார், இங்கே அனுமதியில்லை என்று கூறிவிட்டனர், இந்த நிலையில் ஆட்டோகாரரும் மருத்துவமனை வாயிலில் இறக்கிவிட்டு காசு கூட வாங்காமல் ஓடிவிட்டார், உடனடியாக அரசு மருத்துவமனைக்கு அழைத்து செல்ல வேறு ஆட்டோ பிடிக்க ஆட்டோ நிறுத்துமிடம் சென்றபோது ஒரு வாகனம் கூட இல்லை, எல்லோரும் மறைந்து விட்டனர், தனியார் மருத்துவமனையில் ஆம்புலன்ஸ் கேட்டபோது ஓட்டுனர் இல்லை என்றனர், உடனடியாக தாமதிக்காமல் எங்கள் பேராசிரியர் ஒருவரை தொலைபேசியில் அழைத்து அவருடைய காரில் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர் இவை அத்தனையும் 15 நிமிடத்தில் நடந்தது, விசம் குடித்து வெகுநேரம் ஆகியிருந்ததால் எத்தனை முயன்றும் காப்பாற்றமுடியவில்லை.

இதே நேரத்தில் அவருடையை தந்தைக்கு ஆள் அனுப்பியாகிவிட்டது. அவர் வீடு கல்லூரியிலிருந்து 100கி.மீ. தாண்டி இருக்கும் ஒரு கிராமம்.

கல்லூரி பேராசிரியர்கள் சிலர் வந்தனர், பிரேத பரிசோதனை செய்தால் செய்தித்தாள்களில் செய்தி வரும், காவல் துறை விசாரனை வரும், உங்களுக்கு தேர்வு சமயம், தேவையில்லாத பிரச்சினை வரும் உடனே பிரேதத்தை எடுத்து செல்லுங்கள் என மருத்துவரும் பேராசிரியர்களும் வலியுறுத்தினர், அந்த சமயத்திலெல்லாம் நான் மருத்துவமனையிலிருக்கின்றேன்.

பின் உடனடியாக ஒரு கார் வைத்து விடுதியில் காத்திருக்கின்றோம் இறந்தவரின் தந்தைக்காக, அங்கேயும் சிலர் வந்து இன்னும் எத்தனை நேரம் காத்திருப்பீர் நேரம் ஆக ஆக சிக்கல் தான் பெற்றோருக்காக காத்திருக்காதீர்கள் உடனே கிளம்புங்கள் அவர் ஊருக்கு என்றனர்,

யார் அந்த ஊருக்கு செல்வது என்ற போது பலர் ஒதுங்கினர்,என்னையும் சேர்த்து 6 பேர் தயாரானோம், ஆனால் நானும் இன்னும் மூன்று மாணவர்களும் எங்கள் கல்லுரியில் வேலை செய்த Non-Teaching அலுவலர் (இவர் அந்த மாணவனின் பக்கத்து ஊர்) ஒருவரும் கிளம்பினோம், எங்கள் பேராசிரியர் சிலர் நீங்கள் யாரும் பயப்படாதீர், நாங்கள் பின்னால் வேறொரு காரில் வருகின்றோம் என்றனர்.

காலை 10.30க்கு கிளம்பி அந்த ஊரை 12.00க்கு அடைந்தோம், டிக்கியில் பிரேதம். அந்த மாணவரின் வீட்டை அடைந்த போது அவரின் தந்தை மருத்துவமனைக்கு சென்றுள்ளார், அவரின் அண்ணி நிறைமாத கர்ப்பினியாக, உடனடியாக விடயத்தை சொல்லாமல் அவரின் அண்ணனுக்கு தகவல் சொல்லி காத்திருந்தோம், எங்களோடு வந்த ஓட்டுனர் உடனே சொல்லுங்கள் நான் செல்ல வேண்டும் என்றார், நாங்கள் அவரை பொறுக்க சொன்னோம், அவர் திடீரென அவரின் அண்ணியிடம் சென்று அந்த மாணவர் இறந்துவிட்டார் சடலம் டிக்கியில் உள்ளது என்று கூறிவிட்டார், பெருங்குரலெடுத்து அவரின் அண்ணி அழ 5 நிமிடத்தில் ஒரு 200 - 300 பேர் கூடிவிட்டனர், சடலத்தை எடுத்து அவர்கள் வீட்டில் வைத்துவிட்டு வெளிவந்த அந்த நிமிடத்தில் கூட்டத்தில் இருந்த ஒவ்வொருவரும் எங்கள் நால்வரையும் இழுத்து கேள்வி மேல் கேள்வி கேட்க ஆரம்பித்தனர், அந்த வீட்டின் முன்பு ஒரு போக்குவரத்து மிக்க சாலை அங்கே சென்ற பேருந்துகள் கூட்ட நெரிசலால் நின்று நின்று போக ஆரம்பித்தன.

இன்னும் அவரின் சகோதரரும், தந்தையும் வரவில்லை, நானும் மற்றொரு நண்பரும் மட்டும் வாடகைக்காருக்கு பணம் தந்துவிட்டு மாலை வாங்கி வர சென்ற போது அந்த வாடகைக்கார் ஓட்டுனர் தம்பி நிலவரம் சரியில்லை, நீங்க 4 பேரும் உடனடியா என்னோடவே வந்துடுங்க என்றார் ஆனாலும் எந்த பதட்டமுமில்லாமல் அவருக்கு பணம் தந்துவிட்டு அருகிலிருந்த நகரத்திலிருந்து மாலை வாங்கிக்கொண்டு மீண்டு அதே ஊருக்கு வந்தோம்.

நேரம் ஆக ஆக கூட்டம் அதிகமாகிக்கொண்டிருந்தது, அதற்குள் சிலர் குடித்துவிட்டு வந்தனர், அவர்கள் வந்து கேவலமாக பேச ஆரம்பித்தனர், வருவதாக கூறிய விரிவுரையாளர்களும் பேராசிரியர்களும் வரவில்லை, தனித்தனியாக எங்களை பிரித்து கும்பல் கும்பலாக விசாரணை நடத்தினர், அங்கு நின்றிருந்த பேருந்து ஓட்டுனர் என்ன கூட்டமென கேட்க நீ இங்கேயே கொஞ்சம் நில்லு இன்னும் கொஞ்ச நேரத்தில 4 கொலை விழப்போகுது பாடி எடுத்துக்கொண்டு போக நில்லு என்றார் கும்பலில் ஒருவர், மேலும் கடுமையான கொலை மிரட்டல்கள் நேரடியாக விடப்பட்டன, இத்தனை நடந்தும் ஒரு சிறிய பதட்டம் கூட என்னில் இல்லை கூட படித்த நண்பன் இறந்தவிட்டானே என்ற வருத்தத்தைதவிர இந்த கொலை மிரட்டல்கள் எல்லாம் மிக சிறிய அளவில் கூட என்னிடம் பாதிப்பேற்படுத்தவில்லை, ஆனால் சில ஆண்டுகளுக்கு பிறகு இதையெல்லாம் நினைத்துப்பார்க்கும் போது நடுங்கிவிட்டேன் ஏன் தற்போது இதை எழுதிக்கொண்டிருக்கும் போது கூட என் நெஞ்சு பட படக்கின்றது எத்தனை ஆபத்திலிருந்து அன்று தப்பியிருக்கின்றோம் என்று, அன்று மட்டும் யாரேனும் ஒருவன் எங்களில் ஒருவனி சட்டையை பிடித்திருந்தாலோ ஒரு அடி கொடுத்திருந்தாலும் மொத்த கூட்டமும் எங்களை பஞ்சராக்கிவிட்டிருக்கும் கிட்டத்தட்ட 4 மணி நேர மிரட்டல்களை 4 பேரும் இலாவகமாக சமாளித்துக்கொண்டிருந்த போது அவரின் தந்தை வந்துவிட்டார், வந்த உடன் எங்கள் நான்கு பேரையும் கையோடு சேர்த்துக்கொண்டார், அதன் பிறகு யாரும் எங்கள் கிட்டே வரவில்லை, அதன் பிறகு இடுகாட்டில் எரியூட்டப்பட்டு பிறகு நாங்கள் வண்டியேறும் வரை எங்களை ஒரு நொடிக்கூட பிரிந்திருக்கவில்லை, கடைசியில் வேறு சில நண்பர்களும் எங்கள் நண்பராக இருக்கும் ஒரு விரிவுரையாளரும் வந்தனர். அதன் பிறகு அந்த ஊரின் அருகிலிருந்த ஊரிலிருந்து எங்கள் கல்லூரிக்கு படிக்க வந்த சில பெண்கள் பல ஆண்டுகளாக அந்த தற்கொலைக்கு வேறு வேறு காரணம் கற்பித்து வந்ததை அவ்வப்போது எங்களிடம் சொல்வார்கள்.

எந்தவித அரசு சான்றுகளுமில்லாமல் ஒரு சடலத்தை எடுத்துக்கொண்டு எங்களுக்கு தெரியாத உணர்ச்சிவயப்படும் ஒரு கிராமத்திற்கு செல்ல எது எங்களுக்கு தைரியம் கொடுத்தது?

கும்பலாகவும் சிலர் குடிபோதையிலும் கையில் கழி, கடப்பாரை, கத்திகள் போன்ற ஆயுதங்கள் வைத்துக்கொண்டு எங்களுக்கு கொலை மிரட்டல் விட்ட போதும் அந்த மிரட்டல்களை கொஞ்சம் கூட லட்சியம் செய்யாமல் அத்தனை பேரையும் பேசி சமாளிக்க தைரியம் கொடுத்தது எது?

ஓட்டுனர் எச்சரித்த போதும் திரும்பி போகாமல் கடைசி வரை கூடவே இருந்ததற்கான தைரியம் கொடுத்தது எது?

இன்றைக்கு அதை நினைத்தாலும் குலை நடுங்குகின்றேன், ஆனால் அப்போது இந்த பயம் இல்லை எதனால் என்றால் எல்லாம் அந்த வயசுங்க, வயசு, எந்த ஆபத்தையும் பற்றி எண்ணாமல் கால் தரையில் படாமல் திரிந்த வயசு. ஓடுற பாம்பை மிதிக்கிற வயசு, இந்த வயதில் செய்யும் ஒரு சில செயல்கள் மொத்த வாழ்க்கையையும் மாற்றிவிடும், இந்த வயதில் பெற்றோர்கள், ஆசிரியர்களின் கண்காணிப்பு மிக அவசியம், நல்ல நண்பர்கள் முக்கியம், நண்பராக பெற்றோர்களும் ஆசிரியர்களும் செயல்படவேண்டும் எதிரியாக அல்ல. ஏன் இதை இத்தனை விரிவாக எழுதினேன் என்பது அடுத்த பதிவில்.

கமல் என் கனவு நாயகன் - அசின் மன்றம் கலைப்பா?!

'கமல் என் கனவு நாயகன்' - சிலிர்க்கிறார் அசின், என்று அசின் பேட்டி விகடனில் வெளிவந்துள்ளது. அசின் அப்படி என்றால் குற்றமற்றவள் என்றும் அதாவது சின் இல்லாதவள் என்று அர்த்தம், இனிமையான சங்கீதம்னும் அர்த்தம் உண்டு என்று பேட்டியளித்த போது கமல் என் கனவு நாயகன் என்றும் அவர் காலேஜ் படிக்கும் போது அவர் கனவில் கமல் தான் வருவாரென்றும் இந்த பேட்டியில் கூறியதை படித்த குழலி கடுங்கோபத்தில் இருப்பதாக நம்பத்தகுந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

Image hosted by Photobucket.com

அது மட்டுமின்றி கோபத்தில் ரசிகர் மன்றத்தை கலைப்பதாக குழலி கூறுவதாக உறுதிபடுத்தப்படாத தகவல்கள் தெரிவிக்கின்றன. அசினுக்கு கோவில் கட்டும் பணியை நிறுத்த சொல்லிவிட்டதாகவும் உறுதிபடுத்தப்பட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.

அது மட்டுமின்றி நடிகையாக வராமல் போயிருந்தா என்று மிக அற்புதமான ஒரு கேள்வியை கேட்ட நிருபரிடம் "அந்த பேச்சே கிடையாது, உங்க அம்மா மாதிரி நீயும் டாக்டரா ஆகியிருக்கலாமே?னு நிறைய பேர் என்னை கேட்டு இருக்காங்க. நோயாளிங்க பாவமில்லையா. பிழைச்சு போகட்டும்னு விட்டுட்டேன்" - சிரிக்கிறார்

"நோயாளிகளை விட்டுட்டீங்க... ஆனா ஆரோக்கியமானவங்களை உங்க அழகுசிரிப்பால நோயாளி ஆக்கிடுவீங்க போலிருக்கே" என்று நிருபர் விட்ட ஜொள்ளு ஆறாக பெருகிஓடியதும் கேள்விப்பட்ட குழலி மிகக்கடும் கோபத்தில் இருப்பதாக நம்பத்தகாத வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

அசின் மன்றத்தை கலைத்துவிட்டு சிங்களத்து சின்னக்குயில் 'பூஜா' ரசிகர் மன்றம் ஆரம்பிக்க முனைவதாக வதந்'தீ' பரவியுள்ளது, ஆக மொத்தத்தில் ஏதேனும் ஒரு மன்றத்தில் மூளையை கழற்றிவிட்டு இருப்பதாக முடிவு செய்துள்ளார் போலும்.

Image hosted by Photobucket.com

மன்ற கலைப்பு விவாகரத்தை தெரிந்து கொள்ள +65 0000000 என்ற அவரது எண்ணிற்குதொடர்பு கொண்ட போது அவர் கைத்தொலைபேசியை நிறுத்தி வைத்துள்ளதாக தெரிகின்றது.

இன்னைக்கு நிம்மதியா தூங்கலாம் அசின் படத்தை போட்டு ஒரு பதிவு போட்டாச்சி

நன்றி
விகடன்.காம்

ஒரு முயற்சி

இந்த வலைப்பதிவு சராசரியாக ஒரு நாளைக்கு 200 முறை பார்வையிடப்படுகின்றது(ஹி ஹி என்னையும் சேர்த்துதான்), நையாண்டி, நகைச்சுவை, கருத்து கந்தசாமியாக கருத்து சொல்லித்திரிவது, என் படைப்புகளை பதிவது, என் சார்பு கருத்துகளை எடுத்து வைப்பது என்பதோடு இதை சில ஆக்கப்பூர்வ விடயங்களுக்கும் பயன்படுத்தலாம் என இந்த வலைப்பதிவில் கூகுள் விளம்பரங்களை இணைத்துள்ளேன்,

இந்த கூகுள் விளம்பரங்கள் வழியாக கிடைக்கும் தொகை முழுவதும் ஆதரவற்றோர் இல்லங்களுக்கும், நலிவடைந்த தமிழ் பள்ளிகளுக்கும் அனுப்பப்படும்.

கூகுளின் Terms and Conditions ஐ நான் ஏற்றுக்கொண்டிருப்பதால் இதற்கு மேல் இங்கே பேச முடியவில்லை.

அவ்வப்போது இது தொடர்பான விடயங்களை(updates) தெரிவிக்கின்றேன்.

பின் குறிப்பு:
இது மாதிரியான முயற்சிகளில் எனக்கு அதிக முன் அனுபவமில்லாததால், இதில் ஏதேனும் தவறோ, சட்ட சிக்கல்களோ, விதிமுறை மீறல்களோ இருப்பின் தெரிவிக்கவும்

கனடா கொண்டார் பட்டம்

முன்குறிப்பு
ஏற்கனவே நான் பதிப்பித்த இந்த பதிவை ப்ளாக்கர் தின்று சதி செய்துவிட்டதால் மீண்டும் பதிப்பிக்கின்றேன், இதற்கெல்லாம் அசந்துவிடமாட்டோம்.

மூன்று மணி நேரம் ஓடக்கூடிய திரைப்படம் வெளியாகவில்லை, சுயபுகழ் பேசும் வசனங்கள் இல்லை, தில்லானா தில்லானா பாடல்கள் இல்லை, போஸ்டர்கள் இல்லை, விளம்பரங்கள் இல்லை, கொடிகள் இல்லை, மன்றங்கள் இல்லை, துதி பாடிகள் இல்லை, இத்தனை இத்தனை இல்லைகள் ஆனால் ஒரே ஒரு புகைப்படம் மொத்த கனடாவையும் கவிழ்த்துவிட்டது.
Image hosted by Photobucket.com
தங்கத்தலைவி அசினின் ஒரே ஒரு புகைப்படம் கனடாவை பித்து பிடித்து அலையவைத்தது, தலைவியை காண வேண்டுமென்ற ஆவலில் என்ன ஏதென்று விசாரிக்காமல் மூளையை கழற்றி வைத்துவிட்டு கனடாவிலிருந்து இந்தியா வந்து அலைகின்றார்கள் என்றால் தலைவியின் புகழ் உலகெங்கும் எந்த அளவிற்கு பரவியுள்ளது என்பது எல்லோருக்கும் புலப்படும், வேறெந்த நடிகரும் நடிகையும் ஒரே ஒரு புகைப்படத்தால் மொத்த நாட்டையும் பித்து பிடித்து அலைய வைத்ததில்லை.

ஆனால் எம் தலைவியின் புகழ் பாரெங்கும் பரவுவதை கண்ட சில பொறாமை பிடித்த உள்ளங்கள் வயிற்றெரிச்சலில் அசின் செய்த பிராடு என பதிவெழுதி எம் தலைவியின் புகழை குலைக்க பார்க்கின்றனர், ஏற்கனவே கனடா முழுக்க அசின் பித்து பிடித்து அலைந்து கொண்டிருக்கும் நேரத்தில் ஐஸ்வர்யாவின் புகைப்படத்தை போட்டு வெளிச்சம் போட்டு காட்டுவதாக கூறும் முகமூடியே அவர்களே நீர் எத்தனை பதிவு போட்டாலும் அசின் அசின் தான், ஆயிரம் கரங்கள் மறைத்தாலும் ஆதவனின் ஒளி மறைவதில்லை, எனவே எத்தனை பதிவுகள் முயன்றாலும் அசின் புகழை யாராலும் மறைக்க இயலாது என சவால் விடுக்கின்றேன்.

இது போன்ற ஏமாற்று வேலைகளை யாரும் செய்யக்கூடாது என்றுதான் எங்கள் தலைவி இணையத்தில் அசின்ஆன்லைன் என்ற இணையதளத்தை ஏற்படுத்தி அவரின் புகழ் பரப்பிவருகின்றோம்.

இதுவரை யாரும் செய்யாத சாதனையாக ஒரே ஒரு புகைப்படத்தில் கனடாவை கைப்பற்றிய அசினுக்கு தீவிர ரசிகர்களின் சார்பாக கனடா கொண்டார் என்ற பட்டத்தை தங்கத்தலைவி அசினுக்கு வழங்குகின்றோம்.

எப்படியோ இன்று அசின் படத்தை போட்டு ஒரு பதிவு போட்டாயிற்று

நன்றி
அசின்ஆன்லைன்.காம்
தினமலர்.காம்

கூகிள் விளம்பரங்கள் மூலம் ஒரு முயற்சி

இந்த வலைப்பதிவு சராசரியாக ஒரு நாளைக்கு 200 முறை பார்வையிடப்படுகின்றது(ஹி ஹி என்னையும் சேர்த்துதான்), நையாண்டி, நகைச்சுவை, கருத்து கந்தசாமியாக கருத்து சொல்லித்திரிவது, என் படைப்புகளை பதிவது, என் சார்பு கருத்துகளை எடுத்து வைப்பது என்பதோடு இதை சில ஆக்கப்பூர்வ விடயங்களுக்கும் பயன்படுத்தலாம் என இந்த வலைப்பதிவில் கூகுள் விளம்பரங்களை இணைத்துள்ளேன்,

இந்த கூகுள் விளம்பரங்கள் வழியாக கிடைக்கும் தொகை முழுவதும் ஆதரவற்றோர் இல்லங்களுக்கும், நலிவடைந்த தமிழ் பள்ளிகளுக்கும் அனுப்பப்படும்.

கூகுளின் Terms and Conditions ஐ நான் ஏற்றுக்கொண்டிருப்பதால் இதற்கு மேல் இங்கே பேச முடியவில்லை.

அவ்வப்போது இது தொடர்பான விடயங்களை(updates) தெரிவிக்கின்றேன்.

பின் குறிப்பு:
இது மாதிரியான முயற்சிகளில் எனக்கு அதிக முன் அனுபவமில்லாததால், இதில் ஏதேனும் தவறோ, சட்ட சிக்கல்களோ, விதிமுறை மீறல்களோ இருப்பின் தெரிவிக்கவும்

இணையத்தில் அழகுக் கிளி அசின்

Image hosted by Photobucket.com

இணையத்தில் அழகுக் கிளி அசின் என்ற தலைப்பை விகடன்.காம் இல் பார்த்தவுடன் பரவசமாகிவிட்டேன், பரபரப்பாக இருந்தது, சரியென்று அந்த சுட்டியை சொடுக்கினால் சந்தா கட்டணம் கேட்கிறது விகடன், அட நம் தங்கத் தலைவி அசினைவிட பணம் பெரியாத என உடனே பணத்தை கட்டி உள்ளே சென்று பார்த்தேன் ஆகா என்னே நான் செய்த பாக்கியம் என்னே நான் செய்த பாக்கியம், என் தங்கத் தலைவி புரட்சித் தலைவி, சூப்பர்த் தலைவி தனக்கென தனி வெப்-சைட் ஆரம்பிக்கின்ற செய்தியை போட்டிருந்தனர், அதனோடு 'அய்யய்யோ அப்போ இனிமே மத்த பத்திரிக்கைக்கெல்லாம் பேட்டி தரமாட்டிங்களா?' என்று ஒரு உலகின் மிக முக்கியமான கேள்வியையும் 'அப்போ சிஸ்டம் முன்னாடியே கிடந்து அப்-டேட் பண்ற வேலைதான்' என புரட்சிக் கேள்வியையும் கேட்டுள்ளனர்.

Image hosted by Photobucket.com

இதுவா நமக்கு முக்கியம், நான் தேடியது தங்கத் தலைவி அசினின் இணைய தள முகவரி, ஆனால் அந்த நாசமா போன விகடன் பேட்டியில் இணைய தள முகவரியை போடவில்லை.

அய்யோ நானூனூனூனூத்தி அம்பது ரூபாய் வீணாப்போச்சே வீணாப்போச்சே, என நிணைத்தபோது கூகுள் ஆண்டவர் நினைவுக்கு வந்தார், கூகுள் ஆண்டவரிடம் முறையிட்ட போது மிகச்சரியாக தலைவி அசினின் இணைய தள முகவரியை தந்தார், அடடா இதை முன்பே செய்திருந்தால் நானூத்திஅம்பது ரூபாய் மிச்சமாகியிருக்குமே என்று நொந்துகொண்டேன்.
எங்கே தலைவி அசினின் படத்தை பார்த்தவுடன் மூளை வேலை செய்யமாட்டேங்குதே.

தலைவி அசின் ஆகஸ்ட்-16 2005ல் தான் ஆரம்பித்துள்ளார் இந்த இணையதளத்தை, 5 நாளில் 17,143 முறை அவரது இணையதளம் சொடுக்கப்பட்டுள்ளது.

அந்த இணைய தளத்திற்கு போன போது அடா அடா உலகத்தின் அதிசயமே அங்கேதான் இருக்கிறது, எத்தனை எத்தனை உலக முக்கியத்துவம் வாய்ந்த தகவல்கள், அவருடைய முந்தைய திரைப்படங்கள் நடித்துக்கொண்டிருக்கும் அடுத்த திரைப்படங்கள் என்றும் அவருடைய ஃபேவரிட்ஸ் என்றும் எத்தனை அதிமுக்கிய புள்ளிவிவரங்கள் கிடைக்கின்றன, தலைவி அசின் அவர்கள் ஆசியாவில் ஜாக்கிசானின் சாதனையை முறியடித்து தற்போது புருஸ்வில்லீஸ்,அர்னால்டு சிவனேசன் போன்றோரை நெருங்கிக்கொண்டிருக்கின்றார்.

Image hosted by Photobucket.com

நான் அசின் ரசிகனாக இருப்பதற்கு முக்கிய காரணம் அசினின் அழகைவிட, அவரின் நடிப்பை விட அவருடைய தங்கமான குணம் தான், அது எப்படி உனக்கு அசினின் குணம் தெரியும் என கேட்கக்கூடாது அக்காங்...

தலைவி அசினை தமிழகத்தின் முதல்வர் பதவியில் அமர்த்தாமல் ஓயமாட்டோம், தலைவி அசினுக்கு கோவில் கட்டாமல் ஓயமாட்டோம் என்று அகில உலக அசின் ரசிகர் மன்றத்தின் (இன்னும் மன்றம் ஆரம்பிக்கவில்லை) ஒரே தலைவன் என்ற முறையில் சபதமெடுக்கின்றோம்.

அடுத்ததாக விரைவில் எதிர்பாருங்கள் அசின்-31 என்ற ஒரு பதிவு, 31 அவரின் வயசல்ல, அவர் சமீபத்தில் தும்மிய தும்மல்களின் எண்ணிக்கை.

நன்றி
விகடன்.காம்
அசின்ஆன்லைன்.காம் (www.asinonlilne.com)

அதிசயம் ஆனால் உண்மை

இன்று காலை ஒரு அதிசயம் நடந்தேறியது, வழக்கமாக வார இறுதி நாட்களில் காலை 10.00 மணி வரை தூங்குவேன், அப்படி இன்று தூங்கிக்கொண்டிருந்த போது ஒரு கனவு, சேது ச்யான் கெட் அப்பில் கை,கால்களெல்லாம் சங்கிலியால் பிணைக்கப்பட்டு மொட்டையடித்து குறுக வளர்ந்திருந்த முடியோடு சிவப்பாக, இலேசான தாடியோடு, பார்ப்பதற்கு மனநிலை பாதிக்கப்படது போல இருந்த ஒரு இளைஞருக்கு (ஒரு வேளை முகமூடியோ, சின்னவனோ, ஞானபீடமாகவோ இருக்குமோ?! :-) ) ஒரு கிறித்துவ பாதிரியார் சோறு ஊட்டிக்கொண்டுள்ளார், ஒவ்வொரு கவளம் ஊட்டுவதற்கு முன்னும் தட்டில் சோற்றால் சிலுவை வரைந்து வரைந்து ஊட்டிக்கொண்டுள்ளார், அதே சமயம்

டொக்,டொக் என் வீட்டு கதவு தட்டப்படுகின்றது, வீட்டு நடையில் படுத்துறங்கிக்கொண்டிருந்த நான் கதவை திறக்க இரண்டு நடுத்தர வயது பெண்கள் நின்றிருந்தனர், ஏதாவது பொருள் விற்க வந்திருப்பார்கள் என்ற எண்ணத்தோடு ஒரு நிமிடம் என்று கூறிவிட்டு சட்டையணிந்து கொண்டு வந்து என்ன என்று கேட்டேன், 'டு யூ நோ அபவுட் பைபிள்' என்றார் ஒரு பெண், சட சட வென்று பைபிள் பற்றியும் இயேசு கிறிஸ்து பற்றியும் ஆரம்பித்தனர், எந்த மதத்தைப்பற்றி யார் பிரச்சாரம் ஆரம்பித்தாலும் உடனடியாக நான் நாத்திகன் என்று கூறிவிட்டு வந்துவிடுவேன், அதே போல் இன்றும் நான் நாத்திகன் என்று பொய் சொல்லிவிட்டு வந்து நித்திரையை தொடர்ந்தேன், ஆனால் மீண்டும் மீண்டும் என் கனவும் அதைத் தொடர்ந்து பைபிள் பற்றிய பிரசங்கமும் நினைவுக்கு வந்து கொண்டிருந்தது, அது எப்படி இந்த இரண்டு நிகழ்ச்சிகளும் நடந்தது என்பது எனக்கு புரியவில்லை

இது மாதிரி முன்பும் பல நிகழ்ச்சிகள் நடந்துள்ளன, எப்போதெல்லாம் உடல் நிலை சரியில்லாமல் இருக்கும் போதெல்லாம் என் தந்தை தொலைபேசியில் அழைப்பார், ஒரு முறை இரவு 12.00 மணிக்கு சன்னலை திறக்க கை சன்னல் கதவில் மாட்டிக்கொண்டு நகம் பெயர்ந்தது, பின் மருத்துவமனை சென்றுவந்தேன்,அதற்கு இரண்டு மணி நேரத்திற்கு முன்புதான் வீட்டிற்கு தொலைபேசியில் பேசியிருந்தேன், மறுநாள் காலை 8.00 மணிக்கு என் தந்தையிடமிருந்து அழைப்பு, எப்படியிருக்கிறாய் என்று, நேற்று நீ பேசிவிட்டு தூங்கியபோது தூக்கத்தில் திடீரென் உன் நினைவு வந்தது, உடனே பேச வேண்டும் போலிருந்தது, உனக்கு ஆனால் இரவு வெகு நேரம் ஆகியிருக்கும் என்பதால் பேசவில்லை என இந்திய நேரப்படி அதிகாலை 5.30க்கு தொலைபேசியில் பேசுகின்றார், அப்போது என்ன நடந்தது என சொல்லவில்லை, இரண்டு மூன்று நாள் கழித்து நகம் பெயர்ந்ததை கூறினேன், என் அம்மா கூட அடிக்கடி கிண்டல் செய்வார் உங்க இரண்டு பேருக்கும் எப்படித்தான் தெரியுமோ என்று.

இது வரை எனக்கு இதற்கும் விடை கிடைக்கவில்லை, ஏதாவது இதற்கு அறிவியல் பூர்வமான, மன தத்துவப்படியான விடை கிடைக்குமா?

கம்யூனிசம் எனது பார்வையில்

கம்யூனிசத்தை பற்றி எழுதும் அளவிற்கு கம்யூனிச கொள்கைகளை அதிகம் படித்தவன் இல்லை நான். எனவே இது எனது பார்வை மட்டுமே

சமீபத்தில் சிங்கப்பூரில் ஸ்ட்ரைட் டைம்ஸ் பத்திரிக்கையில் வந்த ஒரு கட்டுரையும் கிட்டத்தட்ட அதே சமயத்தில் எமக்கு வந்த ஒரு புள்ளிவிவர மின்மடலும் இந்த பதிவெழுத தூண்டியவை.

ஸ்ட்ரைட் டைம்ஸ் பத்திரிக்கையில் வந்த புள்ளிவிவரம் கடந்த சில ஆண்டுகளில் அமெரிக்கா,சிங்கப்பூர்,இந்தியா மற்றும் சில நாடுகளின் தனி நபர் சராசரி வருமானம், கடைசி 5% மக்களின் சராசரி வருமானம், முதல் 5% மக்களின் சராசரி வருமானம் பற்றிய ஒரு விவரம்.


அதில் புலப்படும் உண்மையென்னவெனில் ஆண்டு தோறும் எல்லா நாட்டு மக்களின் தனி நபர் சராசரி வருமானம் உயர்ந்து கொண்டே செல்கின்றது, அதே சமயத்தில் கடைசி 5% மக்களின் சராசரி ஆண்டு வருமானம் குறைந்து கொண்டே வருகின்றது. முதல் 5% மக்களின் சராசரி ஆண்டு வருமானம் மிக அதிக அளவில் அதிகரிக்கின்றது.

மற்றவர்கள் 1$ சம்பாதிக்கும் பொழுது முதல் 5% இருப்பவர்கள் சில ஆண்டுகளுக்கு முன் சம்பாதித்தது 27$, தற்போதைய நிலை மற்றவர்கள் 1$ சம்பாதிக்கும் நேரத்தில் இவர்கள் சம்பாதிப்பது 200$, அமெரிக்காவில் முதல் 0.12%ல் இருப்பவர்கள் மற்றவர்கள் 1$ சம்பாதிக்கும் போது சில ஆண்டுகளுக்கு முன் அவர்கள் சம்பாதித்தது 200$ தற்போது 17,000$

இவைகள் சொல்லும் செய்தி என்னவெனில் உலகளாவிய அளவில் பணக்காரம் மேலும் பணக்காரன் ஆகின்றான், ஏழை மேலும் ஏழையாகின்றான். நாளுக்கு நாள் பணக்காரர்களுக்கும் ஏழைகளுக்கும் உள்ள இடைவெளி அதிகரித்துக்கொண்டே செல்கின்றது.

'கம்யூனிசம் சரியானது, கம்யூனிஸ்ட்கள் தவறானவர்கள்' என்பது அடிக்கடி கேள்வி பட்ட ஒரு சொலவடை, அது பெரும்பாலும் உண்மையாகவே இருக்கின்றது. நம்மால் கம்யூனிசம் என்றால் தொழிற்சங்கங்கள், ரஷ்யா, சீனாவைத் தாண்டி அதற்கு வெளியில் யோசிக்க முடியாத நிலையில் இருக்கின்றோம். அல்லது யோசிக்க வேண்டாமென இருக்கின்றோம்.

கம்யூனிசம் நான், எனது என்ற தளத்தில் இயங்காமல் நாம்,நமது என்ற தளத்தில் இயங்குகின்றது. முன்னேற்றம் என்பது தனி நபர் முன்னேற்றம் என்று இயங்காமல் கூட்டு முன்னேற்றம் என்று இயங்குகின்றது. இதன் பொருள் தனியாக முன்னேறும் ஒருவனை பின்னோக்கி இழுப்பதல்ல, கூட்டாக அனைவரும் முன்னேறுவது, தனி முன்னேற்றம் என்ற நிலை வரும்போது பொறாமை, தான் முன்னேற வேண்டும் என்ற நோக்கில் மற்றவர்களின் முன்னேற்றத்தில் மண் அள்ளிப்போடுவது, அலுவலகங்களில் நடைபெறும் கூஜா தூக்குதல், ஜால்ரா அடித்தல், காக்கா பிடித்தல் என்று இது எல்லாவிதமான அசிங்கமான முகங்களையும், உத்திகளையும் கடைபிடிக்கின்றது.

முதலாளித்துவத்தில் பெரும் பொருள் ஈட்ட வேண்டும், இலாபக்குறியீடு வருடா வருடம் ஏற வேண்டுமென்ற நோக்கில் மனிதாபிமானமற்ற, அன்எதிக்கல் முறைகளையெல்லாம் கையாள்கின்றனர், அவுட்சோர்சிங் என்ற முறையிலே இன்று பல வேலைகள் வெளிநாட்டிற்கு குறிப்பாக இந்தியாவிற்கு அனுப்பப்படுகின்றன, அதனால் இந்தியாவில் வேலை வாய்ப்பு பெருகுவதும் என்னைப்போன்ற பலர் நல்ல சம்பளம் பெறுவதும் நடைபெறுகின்றது, அவுட்சோர்சிங் செய்பவர்களின் நோக்கம் நல்ல இலாபம் ஈட்டுவது மட்டுமே, இந்தியாவைவிட குறைந்த செலவில் யாரேனும் செய்து தர தயாராக இருந்தால் இந்தியாவை விட்டு அங்கே சென்றுவிடுவர், ஆனால் இந்த அவுட்சோர்சிங் முறையால் வேலையிழந்த அந்த நாட்டுக்காரர்களின் நிலை என்ன?? அந்த நிறுவனத்தின் இலாபக்குறியீடு ஏறிக்கொண்டே செல்லும் அதனால் ஒரு சில பணக்காரர்கள் மேலும் பணக்காரர்கள் ஆவார்கள், ஆனால் தொழிலாளிகள் நிலை ஒரு பெரிய ? இது தான் முதலாளித்துவத்தின் கோர முகம்.

கம்யூனிசம் இந்த இடத்தில் வெறும் இலாப நோக்கை மட்டும் பார்ப்பதில்லை. சமூக பொறுப்போடும் மனிதாபிமானத்தோடும் செயல்படுகின்றது இரஷ்யாவில் கம்யூனிசம் இருந்த போது ஏழை பணக்காரர்களுக்கிடையேயான இடைவெளி குறைவாக இருந்தது ஆனால் இன்றைய நிலை??, கம்யூனிசமே பரவாயில்லை என்ற நிலை அங்கே, கம்யூனிசம் இருந்த போது கிடைந்த அடிப்படை தேவைகள் வசதிகள் கூட அங்கே தற்போது பெரும்பாலான மக்களுக்கு கிடைப்பதில்லை, விளைவு இன்று வளைகுடா நாடுகளின் கேளிக்கை விடுதிகள் சில இரஷ்ய பெண்களால் நிரம்பி கிடக்கின்றன,பாலியல் தொழில் கொடிகட்டி பறக்கின்றன.

இரஷ்யா சிதறுண்டதும், அங்கே கம்யூனிசம் தோல்வி அடைந்ததும் கம்யூனிசத்தின் தோல்வி என்பதல்ல, அது கம்யூனிசத்தின் வெற்றிதான், சில/பல சமயங்களில் எளிதாக கிடைக்கும்போதும் அனுபவிக்கும் போதும் அதன் பெருமை தெரியாது, வேறொன்றிற்கு ஆசைப்பட்டு அதை இழந்து உள்ளதும் போனதடா நொள்ளக் கண்ணா என்றிருக்கும்போது தான் அதன் பெருமை தெரியும், அந்த நிலைதான் இன்று இரஷ்யாவின் நிலை. இது ஒரு வகையில் கம்யூனிசத்தின் வெற்றிதான்.

கம்யூனிசம் பற்றி பேசும் போது வைக்கப்படும் சில வறட்டு வாதங்கள்

1. கம்யூனிஸ்ட் உறுப்பினர்களுக்கு கிடைக்கும் அதிகாரங்கள்

2. வலுத்தவன் வாழ்வான் கோட்பாடு

1. கம்யூனிஸ்ட் பொலிட் பீரோ உறுப்பினர்களுக்கு கிடைக்கும் அதிகாரங்கள்

எல்லோரும் சமம் என்ற இடத்திலே பொலிட் பீரோ உறுப்பினர்களுக்கு உள்ள அதிகாரம் மற்றவர்களுக்கு இல்லையே என்று வைக்கப்படும் மொக்கை வாதம் மிக நகைப்புக்குறியது

என் குடும்பத்தில் என் அண்ணன், அக்காள், என் தாய், தந்தைக்கு இருக்கும் அதிகாரங்கள் எனக்கு இருக்காது என்பது உண்மை, அது அவர்களுடைய அனுபவத்தாலும் உரிமையாலும் எனக்காக உழைப்பதாலும் நான் அவர்களுக்கு தர வேண்டியது என் கடமை.

எனக்காக உழைக்கும், நான் தேர்ந்தெடுத்த முதல்வர், என் நேரத்தைவிட அதிக மதிப்புடைய அவர் நேரத்தை சேமிக்கும் நோக்கிலும் பாதுகாப்பு மற்றும் இன்ன பல காரணங்களுக்காகவும் (இதற்கெல்லாம் அவர்களுக்கு தகுதி உண்டா என்பது வேறு விடயம்) தரப்படும் சலுகைகளும் அதிகாரங்களையும் குறை சொல்வது என்பதை எப்படி விவரிப்பது என்றே எனக்கு புரியவில்லை.

2. வலுத்தவன் வாழ்வான் கோட்பாடு

நாமெல்லாம் மனித சமுதாயம் தானே? விலங்கினம் இல்லையே? வலுத்தவன் வாழ்வானென்றால் பின் எதற்கு காவல்துறை, பின் எதற்கு சட்டம், நீதி, இராணுவமெல்லாம்.

வலுத்தவன் வாழ்வானென்ற நீதி விலங்கினத்திற்கு வேண்டுமானால் சரியாக இருக்கலாம் ஆனால் ஒரு நாகரீகமான, மனித சமுதாயத்திற்கு இது சரியா?

வலுத்தவன் வாழ்வானென்றால் ஒரு பத்து ரூபாய் வைத்துக்கொண்டு கோயம்பேடு பேருந்து நிலையத்தில் என்னால் இறங்கமுடியுமா? சென்னையில் என்னை விட உடல் பலத்தில், அரசியல் பலத்தில், ஆள் பலத்தில், பண பலத்தில் அதிகம் உள்ளவர்கள் இல்லையா?

வலுத்தவன் எது வேண்டுமானாலும் செய்வானென்றால் வீட்டுப்பெண்கள் சாலையிலே நடமாடமுடியுமா?? அல்லது நாம் தான் சுதந்திரமாக இருக்க முடியுமா?

நாமெல்லாம் மனித சமுதாயத்தில் இருக்கின்றோம், விலங்கினத்திலிருந்து இலட்சக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்பே பரிணாம வளர்ச்சியடைந்து மனிதனாக மாறிவிட்டோம், உடல் வலுவை மட்டும் நான் குறிக்கவில்லை, பொருளாதார வலிமையயும் சேர்த்து தான், எனவே அந்த காலத்திலேயே இருக்காதீர்கள்.

உலகாலாவிய அளவில் பணக்காரர்களுக்கும் ஏழைகளுக்கும் உள்ள இடைவெளி அதிகமாகிக்கொண்டே போவது நல்லதற்கல்ல, முதலாளித்துவத்தின் சைடு எபெக்ட் தற்போதுதான் சிறிது சிறிதாக வெளிவர ஆரம்பித்துள்ளது, இது முழுதாக வெளிப்படும் போது உலகலாவிய அளவில் ஒரு மாபெரும் மாற்றம் ஏற்படும், அந்நிலையில் சிற் சில மாற்றங்களோடு கம்யூனிசம் பரந்து பட்டு இருக்கும்.

குயில் கூவுவது ஏன்?

குயில் கூவுவதும் மயில் ஆடுவதும் ஏன்? குயில் ஆடியன்சை எதிர்பார்த்து கூவவில்லையாம், மயிலும் ஆடியன்சை எதிர்பார்த்து ஆடவில்லையாம் ஆகா வந்துட்டாருடா ஞானம்! அட மீன் செத்தா கருவாடு நீ செத்தா வெறுங்கூடு கண்ணதாசன் சொன்னதுங்கோ! அது சரி அதைத்தான் கண்ணதாசன் சொல்லிட்டாரே நீ என்ன சொல்ற அதை சொல்லுபா!

குயில் கூவுதுனா அது இன்னொரு குயிலுக்கு சிக்னல் கொடுக்குதுனு அர்த்தம், அது ஆடியன்ஸ்காக கூவலை, அதே மாதிரி மயில் ஆடுதுனா அது இன்னொரு மயில்க்கு சிக்னல் கொடுக்குதுனு அர்த்தம்.

பல்லி உச் உச்னு சத்தம் கொடுக்குதுனா அது இன்னொரு பல்லிக்கு சிக்னல் கொடுக்குதுனு அர்த்தம், அதை கேட்டுக்கிட்டு வடக்கில் சூலம் தெற்கில் மூலம்னு போகாம இருக்க கூடாதுனு நம்ம சனங்களின் கலைஞன் விவேக் கருத்து சொல்லியிருக்கார்.

சிங்கம் உறுமினால் இன்னொரு சிங்கத்துக்கு சிக்னல் கொடுக்கறதா அர்த்தமில்லை, அது எல்லை பிரச்சினையாகவும் இருக்கலாம்.

சில விஷயம் நமக்கு சரின்னு பட்டாலும், சில சமயத்துல, அந்தச் சரிய, செய்யாம இருக்கறதுதான் சரி...

இது சரியாத்தானே இருக்கு

சில விஷயம் நமக்கு தப்புன்னு பட்டாலும், எல்லா சமயத்துல, அந்த தப்ப, செய்யாம இருக்கறது தப்பு இல்லை.

அட இதுவும் சரியாத்தானே இருக்கு

இங்கே குயிலும் மயிலும் பல்லியும் சிக்னல் கொடுத்துக்கொண்டிருக்கும் போது வான்கோழி இன்டர்நேஷனலுக்கு போயிடுச்சிபா, ஆகஸ்ட்டு 15 னா இந்தியா சுதந்திரம் தினம், ஆகஸ்ட்டு 15 னா கொரிய சுதந்திரதினம் ஆனால் தமிழ் சினிமா ரசிகன் மட்டும் சற்று அதிகமாக சந்தோசப் படும் நாள் ஏன் என்றா கேட்கின்றீர்? என்ன மனுசன்யா நீ, இது கூட தெரியாத நீ தமிழனா? இங்கே செல்லுங்கள். தேவுடா தேவுடா

ஆயாளு எந்தா பரயுனு? கொறச்சி அட்வைஸ் பரஞ்சி, நன்னாயிட்டு பறயும் நன்னாயிட்டு பறயும். ஈயாலு எங்கன போயி, ஈயாலுக்கு புட்டியில புல்லா இருந்தாலும் காய்ச்சி குடிச்சா தான் நெறைக்கும், அட நான் சொல்றேன் அவர் காய்ச்சி குடிச்சது கஞ்சிதான் (தெனாலி கமல் வாய்ஸ்ல படிக்கவும்).

குயிலுக்கும் மயிலுக்கும் பல்லிக்கும் தான் சிக்னல் கெதியா ரீச் ஆகலைனு கோபம்னா இங்கே என்னடானு பார்த்தா குரங்குக்கும் கோபமாம். என்னனு குரங்குகிட்ட கேட்டா

நா என்ன பெர்சா தப்பு பண்ணிட்டேன்... அவன் செஞ்சதுதான் தப்பு, அதுக்கு நா பதில் செஞ்சேன் அவ்ளோதான்...

அவந்தான் தப்பு செஞ்சான்... நீ திரும்ப அதுக்கு பதில் செஞ்சே... ஒனக்கு அது சரி... அவனுக்கு நீ செஞ்சது தப்பா தோணுது...

அவன் ஆட்டத்த என்கிட்ட காட்ட வேணாம்... காட்டினா... நாங் காட்றத தாங்கமாட்டான்... பணம்... எல்லாம் பணத்திமிரு...

அடங்கொக்காமக்க மனுசனுங்களுக்குத்தான் பணம்னா குரங்குக்குமா?

சரி விடு குரங்காரேனு ஒரு இலவச அட்வைஸ் கொடுத்தேன்

சில விஷயம் நமக்கு சரின்னு பட்டாலும், சில சமயத்துல, அந்தச் சரிய, செய்யாம இருக்கறதுதான் சரி...

இது சரியாத்தானே இருக்கு

சில விஷயம் நமக்கு தப்புன்னு பட்டாலும், எல்லா சமயத்துல, அந்த தப்ப, செய்யாம இருக்கறது தப்பு இல்லை.

அட இதுவும் சரியாத்தானே இருக்கு

சரி இது சரிபட்டு வராதுனு வலைப்பதிவில ஒதுங்கிலாமேனு இங்க வந்து பார்த்தா

என் முகத்தினிலே பளபளப்பாய்
இருப்பவனும் நீதான்...
எண்ணமெல்லாம் எழுதி இங்கே
பதிப்பவனும் நீதான்...

என் பதிவை பாதி மட்டும்
படித்துவிட்டு...
பின்னூட்டத்தில் திட்டிவிட்டு...
நெகட்டிவ் குத்துவிட்டு ஓடுபவனும்
நீதான் !

ஒரு மண்ணும் புரியலை, என்னமோ நடக்குது மர்மமா இருக்குதுனு எதுனா ஓலப்பாயில் ஒன்னுக்கு போற மாதிரி கேட்டா குயில் கூவறது ஆடியன்ஸ்க்கு இல்லை, மயில் ஆடுறதும் ஆடியன்ஸ்க்கு இல்லைனு ஒரு ஒலக மகா தத்துவம் வரும், அதனால இப்போதைக்கு அப்பீட்டேய்......

இந்தி எதிர்ப்பு - ஒரு முக்கியமான அலசல்

சாதகம்

இந்தியாவில் நாம் இரண்டாம் நிலை குடிமகனாக ஆகாமல் இருப்பது

மெட்ராஸ் மாநிலம் தமிழ்நாடு என்றானது

வட மாநில, தேசிய கட்சிகளுக்கு மொத்தமாக சங்கு ஊதியது

திமுக ஆட்சிக்கு வந்தது

வணக்கம்,நன்றி,வேட்பாளர்,பேச்சாளர்,தலைவர் இன்ன பல சொற்கள் இன்னும் தமிழில் அழியாமல் இருப்பது.

இந்தி தெரியவில்லை என்றால் வெட்கப்படும் மற்ற மாநிலத்தவரைப் போலல்லாமல் தனித்துவமாக இருப்பது.

இன்னமும் சென்னையில் இந்தி வாடை அடிக்காமல் இருப்பது.

இந்தி படித்தால் வேலை கிடைக்கும் என ஜல்லியடிக்க உதவுவது

இரண்டு தலைமுறையாக இந்தி படிக்கவிடவில்லை என கருணாநிதியை திட்ட ஒரு வாய்ப்பு.

மதராசி என்று எரிச்சலோடு அழைப்பது

எல்லாவற்றிற்கும் மேலாக தமிழிற்கு சங்கு ஊதாமல் இருப்பது.

பாதகம்

அச்சா,நஹி,கியா,சலோ போன்ற அருஞ்சொற்களை தமிழ் மொழி இழந்தது

சல்மான்கான், அமீர்கான், சாருக்கானிற்கெல்லாம் ஊரெங்கும் இரசிகர் மன்றங்கள் ஆரம்பிக்கப்படாமல் இருப்பது

மீனாட்சி சேஷாத்திரி,கஜோல்கெல்லாம் கோவில் கட்டும் பாக்கியத்தை இழந்தது.

28 நாளில் இந்தி கற்றுக்கொள்வது, ஹி ஹி சாதாரணமாக குறைந்தது 30 நாள் ஆகும், இந்தி அனா,ஆவன்னா ஏற்கனவே பள்ளியில் படித்துவிட்டதால் எப்படியும் குறைந்தது 28 நாளாகும்.

தமிழ் திரைப்படங்களின் பெயர் இந்தியில் இல்லாமல் ஆகிவிட்டது. பாவம் தற்போது ஒன்லி இங்கிலீஷ்.

மதராசி என்று ஏளனத்தோடு அழைத்திருப்பார்கள்

இந்தி சரளமாக பேசமுடியாததற்கு கூனி,குறுகி வெட்கப்படுவது

கருணாநிதியை இந்தி எதிர்ப்பை வைத்து திட்ட முடியாமல் போவது, அதனால் என்ன மேன்ட்ரின் படிக்க விடாமல் செய்தது கருணாநிதிதான் என திட்டலாம்

இந்தி படித்தால் வேலை கிடைக்கும் என்று சொல்லமுடியது, அதனால் என்ன மேன்ட்ரின் படித்தால் வேலை கிடைக்கும் என கூறுவோமே.

இந்தி நடிகர்கள் தமிழ்நாட்டின் முதலமைச்சராகும் வாய்ப்பு இல்லாமல் போனது

திமுக ஆட்சிக்கு வந்தது, இதில் பாதிதான் உண்மை, காங்கிரசின் மீது அப்போதிருந்த எரிச்சலும் தான் முக்கிய காரணம்.

தமிங்கிலந்தி என்ற ஒரு மொழி உலகிற்கு கிடைத்திருக்கும்

உள்ளாட்சி மன்றங்களில் பெண்களின் நிலை

இன்று எந்த கட்சி ஆட்சிக்கு வந்தாலும் நிறைவேற்ற முடியாத ஒரு சட்டமாக இருக்கின்றது பெண்களுக்கான பாராளுமன்ற, சட்டமன்ற தொகுதிகளில் 33% இடஒதுக்கீடு, இந்த நிலைக்கு முன் தற்போது உள்ளாட்சி மன்றங்களில் பெண்களுக்கான 33% இடஒதுக்கீடு நிறைவேற்றப்பட்டு அது நடைமுறையிலும் இருக்கின்றது, ஆனால் இந்த இட ஒதுக்கீடு குறிக்கோள் எத்தனை தூரம் நிறவேறியுள்ளது என்பது ஒரு கேள்விக்குறியே.

நான் கல்லூரியில் செயலாளராக இருந்த அமைப்பின் வழியாக ஒரு கிராமத்தில் முகாமிட்டு அந்த கிராமத்திற்கு தேவையான எங்களால் முடிந்த சில உள்கட்டமைப்புகளை செய்வோம், அந்த முகாம் 10 நாட்கள் நடைபெறும் அப்படி ஒரு கிராமத்தை நாங்கள் தேர்ந்தெடுத்து அனுமதிக்காக அந்த ஊரின் ஊராட்சி மன்றத்தலைவரை அனுகினோம், அவர் ஒரு பெண்மணி, அவரிடம் பேசிய பொழுது எனக்கு எதுவும் தெரியாது என் மகன் வருவார் அவரிடம் பேசிக்கொள்ளுங்கள் என்ற போது அதிர்ந்துவிட்டேன், முகாம் இறுதி நாள் விழாவின் போது மேடையில் அவரை அமர சொன்னபோது தன் மகனைத்தான் அனுப்பினார், அவர் மேடைக்கு கீழே எங்கள் கல்லூரி பெண்களோடு அமர்ந்துவிட்டார்.

இரண்டாவதாக உள்ளாட்சி தேர்தலின் போது மாவட்ட கவுன்சிலர் பதவிக்கு நண்பரின் சகோதரர் போட்டியிடுவதாக இருந்தது, ஆனால் அந்த தொகுதி பெண்களுக்கு என ஒதுக்கப்பட்டது, ஒன்றும் பிரச்சினையில்லை நண்பரின் அண்ணி போட்டியிட்டு வெற்றி பெற்றார், மாவட்ட கவுன்சிலர் அண்ணியாக இருந்தாலும் எல்லா பொறுப்பும் அண்ணன் தான் பார்த்துக்கொள்கின்றார்.

ஒரு குடும்ப விழாவின் போது கவுன்சிலர் என்னிடம் பேச வேண்டும் என கூறியதாக நண்பர் கூறியபோது அந்த அக்காவிடம் சென்று என்னக்கா பேசனும்னு சொன்னீர்களே என்ற போது நான் சொல்லவில்லை என் வீட்டுக்காரர் தான் பேசவேண்டுமென்றார், அதாவது கவுன்சிலர் என்று எல்லோரும் அழைப்பது கவுன்சிலரின் கணவரை, இது எனக்கு தெரியவில்லையே தவிர அங்கே எல்லோருக்கும் தெரிந்துள்ளது.

இதெல்லாம் சொந்த அனுபவங்கள், அது மட்டுமின்றி பத்திரிக்கைகளில் படிக்கும்போது மிகச்சில பெண் உறுப்பினர்களைத் தவிர மற்ற அனைத்து பெண் உறுப்பினர்களும் அவர்களின் கணவர்களுக்காகவோ அவர்களின் குடும்ப உறுப்பினர்களுக்காகவோத் தான் தேர்தலில் போட்டியிட்டிருப்பர்.

இன்றும் தனித்துவமாக சுதந்திரமாக செயல்படும் பெண் உறுப்பினர்கள் மிகக்குறைவே, 5% கூட இருக்காது என்றே எண்ணுகின்றேன்.

இதற்கு முக்கிய காரணமாக பெண்கள் அதிகளவில் அரசியலில் ஈடுபடாதது, இரண்டாவது வாக்களிக்கும் மக்கள் பெண் வேட்பாளர்களில் யாருக்கு தகுதி உள்ளது என்று பாராமல் அவர்களின் கணவரையோ அல்லது குடும்ப உறுப்பினர்களின் தகுதியையும்,வலிமையையும் பார்ப்பது தான் இன்றைக்கு உள்ளாட்சி மன்றங்களில் நடைபெற்றுக்கொண்டிருக்கும் போலி இட ஒதுக்கீட்டிற்கு காரணம்.

இதே மாதிரி சட்டமன்ற பாராளுமன்றங்களில் பெண்களுக்காக 33% இட ஒதுக்கீடு கொண்டு வரப்பட்டாலும் அது உள்ளாட்சி மன்றங்களில் உள்ள போலி இட ஒதுக்கீடு போலத்தான் இருக்கும்,

தற்போது இந்த நிலை இருந்தாலும் காலம் செல்ல செல்ல 33% இட ஒதுக்கீட்டில் சுதந்திரமாக செயல்படும் பெண் உறுப்பினர்களின் எண்ணிக்கை அதிகரித்து ஒரு நாள் முழுமையடையும் எனவே 33% இட ஒதுக்கீட்டை சட்டமாக்கும் அதே நேரத்தில் அரசியல் கட்சிகளும் உண்மையான எண்ணத்தோடு சட்டமன்றம்,பாரளுமன்றத்தில் பெண்களுக்கு அதிக அளவில் போட்டியிட வழி செய்ய வேண்டும், பெயருக்காகவும் கணக்கிற்காகவும் மாவட்ட செயலாளரின் மனைவிக்கும் மகளுக்கும் போட்டியிட அனுமதியளிப்பதைவிட உண்மையிலேயெ சுதந்திரமாக இயங்கும் பெண்களுக்கு வாய்பளிக்க வேண்டும்.

பின்னூட்டமே பதிவாக

அய்யா என்னார் அவர்களின் இந்த பதிவிலிட்ட பின்னூட்டம் இங்கே பதிவாக

வணக்கம், நான் இந்தி திணிப்பு எதிர்ப்பு போராட்டம் நடந்த காலக்கட்டத்தை சேர்ந்தவனில்லை, ஆனாலும் எமக்கு தெரிந்தவரை இந்தி மொழியை யாரும் படிக்க கூடாது என்று அறிவுறுத்தியமாதிரி தெரியவில்லை, அப்படி இந்தி மொழி படிக்க விருப்பமுள்ளவர்கள் எத்தனையோ மாணாக்கர்கள் ஹிந்தி பிரச்சார சபா வழியாகவும் இன்றும் படித்துக்கொண்டுள்ளனர், இதை யாரும் கையைப்பிடித்து தடுத்ததாக தெரியவில்லை எமக்கு.

இந்தியை ஒரு கட்டாய மொழிப்பாடமாக படிப்பது என்பது தான் இங்கு பிரச்சினையே, முதலில் கட்டாய மொழிப்பாடமாக ஆரம்பித்து பின் மொத்தமாக இந்தி என்னும் ஒட்டகம் கூடாரத்தினுள் புகுந்து விடும், இப்படித்தான் இன்று குசராத்தி, மற்றும் இன்ன பல கூடாரங்களில் இந்தி மொழி புகுந்து விட்டது.

//வட, மத்திய, கிழக்கு மாநிலங்களில் பிழைப்பு தேடிச் சென்ற தமிழர்கள் இந்தி தெரியாமல் அனுபவிக்கும் கஷ்டங்கள் கொஞ்ச நஞ்சமல்ல.
//
ஒரே ஒரு மொழிப்பாடமாக ஆங்கிலம் படித்தவர்கள் எல்லாம் ஆங்கிலத்திலே புலமையோடு இருப்பதாகவும் நன்றாக ஆங்கிலம் பேசுபவர்களாகவும் இருக்கின்றனர்களா? மனதை தொட்டு சொல்லுங்கள், இல்லையே, ஒரே ஒரு மொழிப்பாடமென்ன, ஆங்கில வழியிலே படித்த எத்தனையோ மாணாக்கர்கள் 5 நிமிடம் ஆங்கிலத்தில் பேசத்திணறியதை நானே கண் கூடாக கண்டுள்ளேன்,அதே போல இந்தியை ஒரு மொழிப்பாடமாக படித்தால் அவர்கள் இந்தி பேசும் மாநிலங்களுக்கு செல்லும்போது அ,ஆ கற்றுக்கொள்ள தேவையில்லையே தவிர மீண்டும் அங்கு முதலிலிருந்து பேசி பழகும்போது தான் இந்தி பேசுமளவிற்கு வரும், அவ்வளவே. மேலும் இந்தி திணிப்பு எதிர்ப்பு என்பது எமக்கு தெரிந்தவரை வெறும் மொழியுணர்ச்சி மட்டுமல்ல, மேலாதிக்க எதிர்ப்பும் கூட, இந்தி மொழியை கட்டாய மொழிப்பாடமாக படிப்பது loose-win நிலமை, இப்படியே சீன நாட்டிற்கு போகும்போது மேன்டிரின் தெரிந்து கொள்ளவேண்டுமென்பதற்காக இங்கே
சீன மொழி மட்டும் என்ன பாவம் செய்தது,சீன மொழியை ஒரு மொழிப்பாடமாக படிக்க ஆரம்பிக்கலாம், சப்பான் நாட்டு மொழியும் தான், மற்ற எல்லா இடங்களுக்கும் செல்லும் தமிழர்களைவிட பிழைப்புக்காக கர்னாடகா செல்லும் தமிழர்கள் தான் மிக அதிகம், தொழில்நுட்ப வல்லுனர்களும் சரி, படிப்பறிவே இல்லாமல் கூலித்தொழிலாளியாக செல்பவர்களும் சரி, எனவே இந்த வாதத்தின் படி இந்தி படிப்பதை விட கன்னடம் படிப்பதே மிகச்சரியாக இருக்கும். ஆனால் அங்கே இந்தி பேசும் வட இந்தியர்களை விட மிக எளிதல் கன்னடம் பேசி கற்றுக்கொண்டு நெருக்கமாக இருப்பவர்கள் தமிழர்கள் தான், எனவே தேவையெனில் எந்த மொழியையும் கற்றுக்கொள்வது தவறே இல்லை.

ஒரு இனத்தின் அடையாளத்தை அழிக்க, ஒரு இனத்தின் மீது மேலாதிக்கம் செய்ய முதலில் அந்த மொழியை அழி, இது தான் ஈழத்திலே தமிழ்மக்களின் மீது தாக்குதல் தொடுக்கும்முன் மொழியின் மீது தாக்குதல் தொடுத்ததற்கு காரணம், யாழ்பாணத்திலே நூலகம் எரியூட்டப்பட்டதற்கு காரணம்.

மருத்துவர் இராமதாசு ஆங்கிலம் படிக்க கூடாது என்று கூறியமாதிரி எமக்கு தெரியவில்லை.

அய்யா , ஒரு மென்பொறியியல் நிறுவனம் பெங்களூரிலே கன்னடத்திலும், ஆங்கிலத்திலும் அதன் பெயர் பலகை உள்ளது, அதே மென்பொறியியல் நிறுவனம் சென்னையில் ஆங்கிலத்தில் மட்டும் பெயர்பலகை எழுதியிருந்தது, இதற்கு என்ன காரணம்?

//இங்குதான் அவர் குடும்பத்தினர் இருக்கிறார்களே, இங்கேயே தமிழ்வழிக் கல்வி படிக்க அரசுப் பள்ளிகளில் சேர்க்க வேண்டியதுதானே!
//
ஏற்கனே இதே கேள்விக்கு டோண்டு அய்யாவிற்கு சொன்ன பதில்தான், ஒரு தந்தையும், தாத்தாவும் தமிழ் மொழிப்பற்றி பேசுகிறார்கள் என்பதற்காக சிறு குழந்தைகள் பெற்றோர்களை விட்டு பிரிந்திருக்க வேண்டுமென்பது சத்தியமாக எந்த விதத்தில் நியாயம்.

// அன்று இந்தி என்ற மாயத்தோற்றத்தைக் காட்டி ஓட்டுகளை விலைக்கு வாங்கியது போல் ராமதாசும் முயல்கின்றார் வேறு ஒன்றம் இல்லை//
அய்யா தமிழ் மொழி உணர்வை காட்டி இன்று ஒரு ஓட்டுகூட கூடுதலாக வாங்க முடியாது என்பது நிதர்சனமான உண்மை, இது மருத்துவருக்கும் திருமாவுக்கு நிச்சயமாகத் தெரியும்.

இத்தனை நாட்கள் அன்புமணியின் குழந்தைகள் தமிழ் மொழிப்பள்ளியில் படிக்க வில்லை என ஜல்லியடித்தனர், தற்போது அதற்கான பதில் கிடைத்தவுடன் அடுத்து அன்புமணி குழந்தைகளில் பெயரை ஆரம்பித்துவிட்டனர், அந்த குழந்தைகளின் வயது 12,14 பெரியார் நாத்திகம் பேசுவதற்கு முன் சில கோவில்களில் தர்மகர்த்தாவாக இருந்தார், கருநாநிதி அவர்களின் பெயர் பிரபலமாகிவிட்டதால் பேராசிரியர் அன்பழகன் பெயர் மாற்றிக்கொண்டபோது அவர் பெயர் மாற்றிக்கொள்ளவில்லை.

இராமதாசு மீதும், கருநாநிதி மீதும் காழ்ப்புணர்ச்சி,வெறுப்பு இருந்தால் வேறு வழியில் அதை காண்பிக்கலாம், அதற்காக அவர்கள் கூறும் சில நல்ல கருத்துகளுக்கு எதிர்ப்பு தெரிவிப்பது அந்த கருத்துக்கு எதிர்ப்பு தெரிவிப்பது போல.

ஒரு வாதத்திற்காக கேட்கின்றேன், அரசியல்வாதிகள் சொல்கிறார்கள் என்பதற்காக அந்த கருத்தே தவறு என்பது எந்த விதத்தில் நியாயம்

//அவசர சிகிச்சைப் பிரிவில் மூச்சுத்திணறிக் கொண்டிருக்கவில்லை தமிழ் மொழி//
இப்படியே போய்கொண்டிருக்கும்போது அந்த நிலை வரும் நாள் வெகுதொலைவில் இல்லையெனத் தோன்றுகின்றது. அய்யா தமிழை படியுங்கள், ஆங்கிலத்தில் மட்டும் பெயர்பலகையா? தமிழிலும் பெயர்பலகை எழுதுங்கள், மிக எளிதாக அனைவரிடமும் ஊடுறுவும் திரைப்படங்களுக்கு தமிழில் பெயர்வையுங்கள் என்பதற்கு இத்தனை ஏச்சும்,பேச்சுமென்றால் மூச்சு திணறும் காலம் வெகு தொலைவில் இல்லை என்பது நிதர்சனமான உண்மை

சிறுகதை - கல்லூரி மாமா

உங்களுக்கு தெரிந்திருக்கும், ஒரு கல்லூரியில் பசங்கலாம் 18-22 வயசுக்குள்ள இருந்தா ஒரு ஒன்றிரண்டு மாணவர்கள் மட்டும் 26-27 வயசுல இருப்பாங்க,சிலருக்கு திருமணம் கூட ஆகியிருக்கும், இவங்களையெல்லாம் செல்லமா பசங்க மாமானு கூப்பிடுவாங்க, அதில சில மாமா பழமா இருக்கும், நம்மையெல்லாம் பார்த்தா சின்ன பசங்க அப்படினு மதிக்கவே மாட்டாங்க, தான் உண்டு தன் வேலை உண்டு என்று இருப்பாங்க, ஆனா இன்னும் சில மாமா இருக்காங்களே படு சேட்டை புடிச்ச ஆளுங்க, அப்படி நம்ம படிக்கும் போது ஒரு மாமா இருந்தார் நமக்கு சீனியர், அவர் போடுற சட்டையில அயரினிங் கிரீஸ் மடிப்பு அப்படியே இருக்கும். அந்த அளவுக்கு மனுசன் சுத்தமா அயர்ன் செய்வார், அதே மாதிரி மனுசன் தினம் தினம் ஒரு ஷீ போட்டுக்கொண்டு சோக்காதான் வருவார், எப்போது பார்த்தாலும் அப்போதான் மேக்கப் போட்ட மாதிரி இருப்பார்.

அவருக்கு திருமணம் ஆகி இரண்டு குழந்தை கூட இருப்பதாக சொல்லிக்கொண்டார்கள், அதில் ஒரு பெண் குழந்தை கைக்குழந்தையாம்.

நான் இருக்கனே! என்னத்த சொல்ல, யாருக்கிட்டயுமே பேசாத உம்மனாம் மூஞ்சி பசங்க, இந்த திமிரு புடிச்ச பசங்கனு சொல்லுவாங்களே அவனுங்க எல்லாம் நம்ம கிட்ட தான் அப்படி பேசுவானுங்க, அதுவும் மணிக்கணக்கா பேசுவானுங்க, சொந்த கதை சோகக்கதையெல்லாம் பேசுவானுங்க, இந்த பசங்களுக்கு நம்ம அருமை தெரிந்த அளவுக்கு எங்க காலேஜ் ஃபிகருங்களுக்கு நம்ம அருமை தெரியலை, அதானால் காதால புகை விடறதே நம்ம வேலை.

அப்படியும் பார்த்தா பரிதாபமா இருக்கானே என்று ஒன்று இரண்டு ஃபிகருங்க நம்ம கிட்டயும் கடலை போடுங்க (பிறகு நான் கடலை போடுவேன்னு சொன்னா நம்ம இமேஜ் என்ன ஆகும்).


புத்தருக்கும் போதிமரம் மாதிரி நம்ம பசங்க கடலை போடுற இடம் தான் S கேட், வெயில் மழைக்கெல்லாம் அஞ்சுவதே கிடையாது, எப்பவும் அங்கே கடலை வறுத்துக்கொண்டே இருப்பார்கள், எங்க எலெக்ட்ரிக்கல் புரொபசர் அந்த கேட் வழியாதான் போவார், அப்படியே போகும்போது யாரு யாரோட கடலை போடுறாங்கனு பார்த்துப்பார், எலக்ட்ரிக் சர்க்யூட் லேப் எக்ஸாமில தான் எல்லாருக்கும் வேட்டு வைப்பார், நம்ம மாதிரி மெக்கானிக்கல் பசங்கலாம் மூணாவது செமஸ்டர் வரை S கேட் பக்கம் தலை வைக்க மாட்டோம், ஏன்னா அந்த செமஸ்டர்ல தான் எங்களுக்கு எலக்ட்ரிக் சர்க்கியூட் லேப், அதற்கு பிறகு இல்லை, ஆனா எலெக்ட்ரிக்கல் டிபார்ட்மெண்ட் பசங்கதான் ரொம்ப பாவம்.

நம்ம வகுப்பு முடிஞ்சிதா "S" கேட்டு பக்கமா போய் கடலையை போட்டுவிட்டு அப்படியே மரணவிலாஸ்ல டீ குடிக்கலாம் என்று வந்து கொண்டிருந்தேன், கோவில் கிட்ட நின்று கொண்டிருந்த மாமா, என் தோள் மேல கைபோட்டபடி

"என்னடா பிரபு S கேட் பக்கம், உண்ணைய நான் பார்த்ததேயில்ல அங்கெல்லாம்"

"இல்ல மாமா சும்மா தான்"

"டேய் என்ன கடலையா?"

"சும்மா ரெக்கார்டு நோட்டு குடுத்தேன்"

"ரெக்கார்டு நோட்டு மட்டும் தானே?"

"ஆமாம் மாமா, என்ன இன்னைக்கு பலமா விசாரிக்கிறிங்க "

"ஆமாம், கடலை போட்டியா யாரு அது உன் ஆளா?"

"அட நீங்க வேற மாமா, என் கிளாஸ் மேட், சும்மா ரெக்கார்டு நோட்டு, அவள்த பார்த்து எழுதனும்னு

வாங்கிட்டு வந்தேன்"

"அது சரி மாமா, என்ன வந்ததுல இருந்து அந்த ஃபிகரைப் பற்றியே கேட்குறிங்க"

"அது என் ஆளுடா!"

"காலேஜ் ல ஒரு ஃபிகரு சுமாரா இருந்துடக்கூடாதே, உடனே என் ஆளுன்னு சொல்லுவீங்களே"

"நெசமாடா!"


மனுசன் இருக்குற ஸ்மார்ட்டுக்கும், பேசுற பேச்சுக்கும், போடுற சட்டை பேண்டுக்கும் உண்மையா

இருந்தாலும் இருக்கும்னு ஒரு கன்பியூஷன் மனசுக்குள்ள

"ஏன் மாமா உங்களுக்கு தான் கல்யாணம் ஆயிடிச்சே, அப்புறம் ஏன் எங்கள மாதிரி சின்ன

பசங்ககிட்டலாம் போட்டி போடுறிங்க"

"அடங்கொக்காமக்க அத நீ நம்புறியா?"

என்ன இந்த ஆளு இப்படி குழப்புறான்

"ஏன் மாமா போன வருசம், என்னை ராக்கிங் செஞ்சப்ப நீங்களே ஒரு தடவை என்கிட்ட

சொல்லியிருக்கிங்க"

"அது சும்மா டா, எங்க இயர்லயே எனக்கு தான் வயசு ஜாஸ்தி, ஆனா எல்லாம் பேர் சொல்லி

கூப்பிடுவானுங்க, வாடா போடானு சொல்வாங்க, எனக்கு காம்ப்ளெக்ஸ்"

"ம்..."

"நம்ம இங்கிலீஷ் புரொபசரும் நான் கிளாஸ் அட்டென்ட் செய்யலைனு கலாய்ப்பார்"

"ம்..."

"அதான் ஒரு நாள் ஸ்வீட் வாங்கி போய் அவர்கிட்ட என் வெட்டிங் டேனு கொடுத்தேன், அதிலிருந்து

மனுசன் என்னை கலாய்க்கறது இல்லை"

"மாமா டீ சொல்லுங்களேன், அப்படியே ஒரு கிங்ஸ்"

"டேய் நீ எப்பவும் பில்டர் கோல்ட் தானே அடிப்ப"

"மாமா வாங்கித்தரும் போது பில்ட்டர் கோல்டா? கிங்ஸ் சொல்லுங்க"

"ராஜா ரெண்டு டீ, ரெண்டு கிங்ஸ் கொடுப்பா"

"அப்புறம் என்ன ஆச்சி மாமா"

"அப்புறமா பசங்க கிட்டயும் அப்படியே மேரேஸ் ஆன மாதிரியே மெயின்டன் பண்ணேன், பசங்களும்

மரியாதையா பேசினாங்கோ"

"ம்..."

"ஆனா அது தான் பிரச்சினை ஆயிடுச்சி"

"இந்த பசங்களுக்கு கடலை போடனும், அதனால அப்படியே ஆரம்பிப்பானுங்க, பிகர்ங்ககிட்ட விசயம் தெரியுமா மாமாக்கு குழந்தை பிறந்திருக்குனு"

"மாமா டூப் உடாதிங்க, நீங்களே ஒரு தடவை சொன்னதா எனக்கு ஞாபகம்"

"டேய், அதெல்லாம் மெயின்டெய்ன் பண்றதுக்குடா"

"ஓ... சரி சரி"

"இப்படியே மாமாக்கு குழந்தை பிறந்திருக்குனு ஆரம்பிப்பானுங்க, அப்படியே வேற விசயம் கடலை போட

ஆரம்பிச்சிடுவானுங்க"

"ஓ..."

"இப்படியே இவனுங்க கடலைபோட நம்ம பெயரை யூஸ் பண்ணிக்குவானுங்க, அதனால ஃபிகருங்களுக்கும்

என் மேல டவுட்"

"ம்..."

"இவனுங்க ஃபிகர் பிக்கப்பண்ண நம்மளை கவுத்திட்டானுங்க"

"என்ன மாமா உங்ககிட்ட இப்படி ஒரு கதையா?"

"நீ கடலை போட்டுட்டு வந்தியே, அந்த ஃபிகர் எங்க ஊருதான்"

"தெரியுமே"

"எப்படிடா"

"ஹி ஹி நான் கடலை போட ஆரம்பிச்சதும் உங்களை வச்சிதானே"

"டேய் நீயுமா டா?"

"நாங்க ஊருல இருந்து வரும் போது பஸ்ல பேசிக்கிட்டு வருவோம்"

"அப்படியா?" எனக்கு காது வழியா புகை வந்தது.

"நான் அவகிட்ட சொல்லிட்டேன் எனக்கு மேரேஜ் ஆகலைனு"

"நெசமா? சரி அவங்க என்ன சொன்னாங்க"

"நான் அவளை லவ் பண்ணுறேண்டா"

இவர் இந்த கதைய ஆரம்பிக்கும்போதே இப்படித்தான் வருவாருனு எனக்கு தெரியும் அதனால ஒன்னும்

பெரிய அதிர்ச்சிலாம் இல்லை....

"சரி மாமா சொல்லிட்டிங்களா?"

"இல்லடா பட் அந்த பொண்ணுக்கும் என் மேலே ஒரு அஃபெக்ஷன் இருக்குடா"

இருந்தாலும் இருக்கும் இவன் பேசறதுல கில்லாடி, ஆள் வேற ஸ்மார்ட்டா இருக்கான்...

"அப்படியா மாமா சரி" நம்பிக்கையில்லாமல் சொன்னேன்

"மாமா பஜ்ஜி போடுறாங்க சூடா ரெண்டு சொல்லுங்க"

"ராஜா நாலு பஜ்ஜி கொடுப்பா"

"மாமா இத்தன நாள் எனக்கும் தெரியாது நீங்க கல்யாணம் ஆகாதவர்னு"

"சரி என் ஆளுகிட்ட கடலை போடும்போது நீயும் சொல்லு"

"சரி மாமா"

சே... இந்த மனுசனுக்குள்ள இப்படி ஒரு கதையா? காம்ப்ளெக்ஸ் எப்படிலாம் பொய் சொல்ல வைக்குது,

நல்ல மனுசன்.

மாமா வீட்டில ஒரு துக்கம், அவரு அப்பா இறந்துட்டாரு, நாங்க பசங்கெல்லாம் வேன் பிடிச்சி போனோம்,

மறக்காம இந்த துக்க செய்தியை LHக்கு போன் போட்டு
அந்த பொண்ணுகிட்ட சொல்லிட்டு கிளம்புனோம்

இவங்கதான் என் மனைவி, இவ பெரிய பொண்ணு 3 வயசு ஆகுது, இவ சின்ன பொண்ணு 9 மாசம்னு அவர்

அறிமுக படுத்தியபோது தான் தெரிந்தது நான் கோயிஞ்சாமி நெம்பர் ஒன்னு அப்படினு.

பின் குறிப்பு:
இந்த கதை மற்றும் சம்பவங்கள் முழுக்க முழுக்க கற்பனையே, யாரையும் குறிப்பிடுவன அல்ல.

இரண்டு செய்திகள் ஒன்றுக்கொன்று தொடர்புடையவை

செய்தி-1
அம்மாவின் ஆட்சியிலே மிதிவண்டி கொடுத்தனர், அம்மா ஆட்சியிலே இலவச பேருந்து அனுமதி கொடுத்தனர். ஆமா இப்போ யாரு இல்லை என்று சொன்னது? இதை நீங்க எங்கெல்லாம் சொல்லலாம், பொது கூட்டத்தில சொல்லலாம், கட்சிவிழாவில் சொல்லலாம், அட அரசாங்கம் கொடுத்த சலுகையை அரசாங்க விழாவில் சொல்லலாம், பத்திரிக்கயில் சொல்லலாம், ஆனால் பள்ளிக்கூடத்தில் சொல்லலாமா?

http://www.kumudam.com/reporter/070805/pg3.php

கடந்த மாதம் 25ம் தேதி கரூரில் அ.தி.மு.க. வினர் நிருபர்களையும் கூடவே அழைத்துக்கொண்டு அம்மாவின் அருமை பெருமைகள சி.எஸ்.ஐ பள்ளிக்கூடத்திற்கு சென்று எல்லா மாணவமணிகளையும் அழைத்து பள்ளி வளாகத்தினுள்ளேயே இறைவணக்கத்திற்கு பயன்படுத்தப்படும் ஒலிபெருக்கியை வைத்து அம்மா புகழ் பாடியுள்ளனர், அதன்பிறகு பிட் நோட்டீசாக அதிமுக அரசின் சாதனை விளக்கத்தை வினியோகித்தனர்.

அதன் பிறகு கரூர் நகராட்சி மேல்நிலைப்பள்ளி,பசுபதீஸ்வர் பெண்கள் மேல்நிலைப்பள்ளி, குமரன் உயர்நிலைப்பள்ளிகளில் அம்மா புகழ் பாடப்பட்டது,

இப்படியே கலைஞர் புகழ் பாட திமுகவும், அன்னை புகழ் பாட காங்கிரசும், அய்யா புகழ் பாட பாமகவும், வைகோ புகழ் பாட மதிமுகவும் பள்ளிக்கூடங்களை நோக்கி படையெடுத்தால் என்ன ஆகும்?

செய்தி-2
பள்ளி மாணவர்களை தற்காலிக ஆசிரியரின் மூலம் பாமகவின் பயிலரங்கத்திற்கு அனுப்பினர் என்ற குற்றச்சாட்டோடு பெரும் பிரச்சினை பத்திரிக்கைகளின் மூலமும் அதிமுகவினரின் மூலமும் சில நாட்களுக்கு முன் கிளப்பப்பட்டது, வலைப்பதிவில் கூட ஒரு பதிவு போடப்பட்டிருந்தது, கட்டாயப்படுத்தி பயிலரங்கத்திற்கு அனுப்பினால் அது மாபெரும் கண்டிக்கப்பட வேண்டிய குற்றம். ஆனால் அந்த மாணவி மற்றும் பெற்றோரினால் எப்படி அந்த பயிலரங்கிற்கு சென்றார் என பேட்டி கொடுத்தனர், யார் அதை பிரச்சினையாக்கியது என்றும் தெளிவாக பேட்டியில் கொடுத்தனர்.
http://ennar.blogspot.com/2005/07/blog-post_16.html
http://www.kumudam.com/reporter/170705/pg8.php

இரண்டு செய்திகளும் ஒன்றுக்கொன்று தொடர்புடையவையாயிருந்தும் இரண்டாவது செய்திக்கு தினப்பத்திரிக்கையால் தரப்பட்ட முக்கியத்துவம் முதல் செய்திக்கு இல்லை, ஹி ஹி வலைப்பதிவிலும் இல்லை. அட குறைந்தபட்சம் தினம் பத்திரிக்கை படிக்கும் எனக்குத் தெரியவில்லை, அதுசரி விடாம வாசகர் கடிதத்திலும், இது உங்கள் இடத்திலும், ***மணி பதில்களிலுமாவது போடலாமே?

வாழ்க நம் பள்ளிக்கூட அரசியல், வாழ்க நம் பத்திரிக்கையின் நடுநிலமை.

'டிஸ்க்கோ' சாந்தி என்றொரு அக்காள்

'டிஸ்க்கோ' சாந்தி, அனைவரும் இந்த பெயரை குறைந்த பட்சம் கேள்வியாவது பட்டிருப்பீர், 'தேள்கடி' நடிகை என்று பிரபல தமிழ் நாளிதழின் ஞாயிற்றுக்கிழமைகளில் வரும் இலவச புத்தகத்தில் குறிக்கப் பட்டவர்.



Image hosted by Photobucket.com


இவருடைய தந்தை ஆனந்தன், சில பழைய திரைப்படங்களில் கதாநாயகனாக நடித்து பணத்தில் புரண்டவர், ஆனால் சில காலங்களில் எல்லா பணத்தையும் இழந்து அடுத்த வேளை சோற்றுக்கு வழியில்லாமல் நின்ற போது பணம் இருந்த காலத்தில் கூடவே இருந்த கூட்டமில்லை, தனியாக நின்றார் கூட இருந்தது பதின்ம வயதிலிருந்த சாந்தியும், குஞ்சும் குளுவானுமாக இருந்த சாந்தியின் தங்கையும் தம்பியும் தான்.

வறுமை கோர தாண்டவமாடியது, அலுவலக வேலைக்குப் போகுமளவிற்கு படிப்புமில்லை, தந்தையால் சம்பாதிக்கும் நிலையுமில்லை, நடிப்புலகிற்கு வந்தார் சாந்தி, தங்க தாம்பாளத்தில் வரவேற்க யாரும் அங்கே தயாராக இல்லை, கிடைத்ததெல்லாம் கவர்ச்சி நடனங்கள் தான், அன்று ஆட ஆரம்பித்தார், தன் தம்பி தங்கைகளுக்கு நல்ல வாழ்வு கிடைக்கும் வரை அவர்களுக்கு இறக்கை முளைக்கும் வரை ஆடினார், குலுக்கு நடிகை,தேள்கடி நடிகை என்று சமூகத்திலுருந்து பத்திரிக்கை வரை கடித்த கடிகள் அத்தனையும் தாங்கிக்கொண்டு ஆடினார்.

ஒரு சமயம் அவர் படப்பிடிப்பிற்கு சென்ற போது வர தாமதமானதால் சாந்தியின் தந்தை படப்பிடிப்பு தளத்திற்கு தொடர்பு கொண்டு சாந்தி ஏன் இன்னும் வரவில்லை (இப்போது உள்ளது போன்று கைத்தொலைபேசி அப்போது இல்லை) என கேட்டபோது சரியான பதிலில்லை, தொடர்ந்து இரண்டு மூன்று முறை தொலைபேசியில் தொடர்பு கொண்டு கேட்டபோது கிடைத்த பதில் 'பயப்படுற நீயெல்லாம் எதுக்கு பொண்ணை நடிக்க அனுப்புற' என்ற ஏச்சு தான் விழுந்ததாம், அழுது கொண்டே தொலைபேசியை வைத்துவிட்டாராம், தன் கையாலாகத தனத்தை எண்ணிய அந்த தந்தை அன்று தூங்கியிருப்பார் என நினைக்கின்றீர்?

தன் சொந்த வாழ்க்கையைப் பற்றி எண்ணாமல், ஒரு தாயைப்போல தன் தங்கையையும் தம்பியையும் வளர்த்த சாந்தி, என்று அவரின் சகோதரிக்கு நல்ல வாழ்க்கை அமைந்ததோ, என்று அவரின் தம்பி சொந்த காலில் நிற்கும் நிலைவந்ததோ அன்றே நிறுத்தினார் ஆடியதை. இது மாதிரியான கவர்ச்சி நடிகைகள் என்றும் குலுக்கு நடிகைகள் என்றும் நம்மாலும் சமூகத்தாலும் பத்திரிக்கையாலும் விளிக்கப்படும் ஒவ்வொரு நடிகயின் பின்னாலும் ஒரு கையாலாகத தந்தையோ, ஏமாற்றிய காதலனோ, கணவனோ இருந்திருப்பார்கள் அல்லது சகோதர சகோதரிகளை காப்பாற்ற வேண்டிய சூழ்நிலையிலிருப்பார்கள்.

நடிகைகள் மட்டுமல்ல, எத்தனையோ பெண்கள் அலுவலகங்களிலும், கூலித் தொழிலாளியாகவும், கடைகளிலும் வேலைசெய்து கொண்டு தன் சொந்த வாழ்க்கையை எண்ணாமல் தன் தங்கை,தம்பிகளின் வாழ்க்கைக்காக பாடுபட்டுக் கொண்டுள்ளனர், இந்த மாதிரி உழைக்கும் பெண்களின் எண்ணிக்கை இதே நிலையில் இருக்கும் ஆண்களின் எண்ணிக்கையை விட அதிகம் என்று எனக்கு தோன்றுகின்றது.

வழியனுப்ப செல்வதால் விளையும் நன்மைகள்

Image hosted by Photobucket.com


Image hosted by Photobucket.com


Image hosted by Photobucket.com



யாராவது ஊரைவிட்டு கிளம்பினால் வழியனுப்ப செல்வதுண்டு, அதனால் பல நன்மைகள் மேலே உள்ள படத்தை பாருங்கள், இதெல்லாம் வழியனுப்ப சென்றதால் கிடைத்தவை.

சென்ற வாரம் ஒரு நண்பர் ஊரைவிட்டு மூட்டை முடிச்சுகளை கட்டிக்கொண்டு கிளம்பினார்,
சரி வழியனுப்பலாம் என்று சென்றேன், அப்படியே இந்த படங்களில் இருக்கும் பொருட்களையெல்லாம் சுட்டுக்கொண்டு வந்து விட்டேன்.

ஏன் தல கைப்பை எடையெல்லாம் சரியாக இருக்கின்றதா என பல முறை கேட்டேன், அதெல்லாம் பார்த்துக்கலாங்க நீங்க கவலைப்படாதிங்க என்றார், நாம என்னைக்கு அதுக்கெல்லாம் கவலை பட்டிருக்கோம் எடை அதிகமா இருந்து அனுமதிக்கலைனா எதுனா தூக்கி போடுவாரே அதை சுட்டுக்கினு வந்துடலாம்னு தான்.

ஆனா மனுசன் கடைசி வரைக்கும் கால்சட்டை பையிலிருந்த பர்சை மட்டும் தூக்கிப்போடவேயில்லீங்கோ படு உசாருங்கோ அவர். அது சரி பையில் இருப்பதற்குதானே எடை போடுகின்றனர், கால்சட்டை பையில் இருப்பதற்கெல்லாம் எடை போட மாட்டேங்குறாங்களே!



Image hosted by Photobucket.com


Image hosted by Photobucket.com


Image hosted by Photobucket.com



அது சரி மேல கீதே படத்துல அதுயின்னானு கேக்குறிங்களா? எத்தனைதான் send off க்கு போயி சுட்டுக்கின்னு வர்றது, அதான் காசு போட்டு வாங்குனேன்.

எல்லாத்துக்கும் மேல மனுசனை ப்ளைட்ல ஏத்திவுட்டுட்டு உடனே வந்துடாம ப்ளைட் கெளம்பி பறக்கறதை பார்த்துட்டு வரோம் பாருங்கோ அதுல ஒரு நிம்மதி, ஆகா மனுசன் கெளம்பிட்டான்டா, நிச்சயமா ஊருல ஆளு இல்லைனு ஆசுவாசபடுத்திக்கிட்டே நாம நம்ம லக்கேஜோட நடைய கட்டவேண்டியது தான்.

ஆனாலும் மனுசன் நம்ம பக்கத்தில் இல்லையென்றாலும் இதையெல்லாம் பாக்க சொல்ல அவர் ஞாபகம் வரும், எனவே மக்களே யாருக்கேனும் உங்கள் ஞாபகம் இந்த குழலிக்கு இருக்க வேண்டுமா வழியனுப்ப கூப்பிடுங்கள்...

இத்த படிச்சிட்டு என்னை திட்டாத தல, சும்மா தமாசு...

ஆனாலும் சிலர் மூட்டை முடிச்ச கட்டிக்கொண்டு கிளம்பும்போது வருத்தமாதாங்க இருக்கு.

மாலனை வாழ்த்துவோம் மனமிருந்தால்

Image hosted by Photobucket.com

திசைகள் ஆசிரியர் திரு.மாலன் அவர்கள் திருச்சியில் அமைந்துள்ள பாரதிதாசன் பல்கலைக்கழகத்தின் செனட் உறுப்பினராக மேதகு தமிழக ஆளுநர் சுர்ஜித் சிங் பர்னாலா அவர்களால் நியமிக்கப்பட்டுள்ளார். மேலும் தகவலுக்கு இங்கே சுட்டுங்கள்.

நீண்ட நெடிய இலக்கிய சேவை, சிறுகதை உலகில் ஒரு புதிய பரிணாமத்தை ஏற்படுத்தியவர் மாலன், மேலும் அவரின் ஊடக பணியும் இலக்கிய பணியும் பாராட்டத்தக்கது, எல்லாவற்றிற்கும் மேல் பிரபலம் என்ற ஒளிவட்டத்தில்(நன்றி- யாரோ ஒரு நண்பர் ஏதோ ஒரு பின்னூட்டத்தில் குறிப்பிட்டிருந்தார்) இருந்து கொண்டு அதை விட்டு இறங்காமல் இருக்கும் எழுத்தாளர் அல்ல.

இணையத்தில் எழுதிக்கொண்டிருக்கும் ஒரு சில பிரபலமான எழுத்தாளர்களில் ஒருவர், என் சக வலைபதிவாளர் (ஹி ஹி அவரை என்னோடு ஒப்பிட்டு விட்டேன் பாருங்கள்!) அவரது பணி சிறக்க வாழ்த்துகின்றேன்.

தனி மனித வெறுப்புகளை ஒதுக்கிவிட்டு வாழ்த்துவோம் மாலனை மனமிருந்தால்

படங்களுக்கும் செய்திக்கும் நன்றி : திசைகள்